சனங்கள் உவப்பன செய்யாவும் செய்க இனங்கழு வேற்றினார் இல் -பழமொழி நானூறு 230

இன்னிசை வெண்பா

மனங்கொண்டக் கண்ணும் மருவில செய்யார்
கனங்கொண்(டு) உரைத்தவை காக்கவே வேண்டும்
சனங்கள் உவப்பன செய்யாவும் செய்க
இனங்கழு வேற்றினார் இல். 230

- பழமொழி நானூறு

பொருளுரை:

(ஒரு காரியத்தைச் செய்ய) மனம் விரும்பிய இடத்தும் அது வழக்கத்தில் வராவாயின் அதனைச் செய்யார் அறிவுடையோர்,

நூல்கள் ஆகாவென்று உரைத்தனவற்றை உறுதிகொண்டு அவற்றைக் காத்தல் வேண்டும்.

நூல்களோடு மாறுபட்டுக் கூறுகின்றனர் என்று மக்களைக் கழுவின்கண் ஏற்றினார் உல்கத்தில் இல்லை ஆதலான், நூல்கள் ஆகாவென உரைத்தனவும் மக்களால் விரும்பப் படுவனவாயின் அவற்றைச் செய்தல் வேண்டும்.

கருத்து:

உலகநடையினை யறிந்து அதற்கொப்ப ஒழுகுக.

விளக்கம்:

தன்னுடைய கருத்திற்கும் இடங்கொடுப்பதில்லை; நூல்களுடைய கருத்திற்கும் இடங்கொடுப்பதில்லை. இங்ஙனம் உலகியல் நடந்து வருவதால் சினந்து கூறுவார் போன்று 'இனங் கழுவேற்றினார் இல்' என்றார்.

ஆகவே, உலகநடை வேத நடைபோல அறநூல்களுட் கூறப்படுவதன்றித் தாமே அறிந்து செய்யும் தன்மையை உடையது என்பதாயிற்று.

'செய்யாவும் செய்க' என்றதனால் நூலொடு மாறுபட்டனவும் உலகியலின்கண் பயின்றுவரும் என்பது பெறப்படும்.

'இனங்கழு வேற்றினார் இல்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Dec-22, 1:14 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 16

மேலே