தாரேற்ற நீண்மார்பின் தம்மிறைவன் நோக்கியக்கால் - பழமொழி நானூறு 231

இன்னிசை வெண்பா

தாரேற்ற நீண்மார்பின் தம்மிறைவன் நோக்கியக்கால்
போரேற்று மென்பார் பொதுவாக்கல் வேண்டுமோ
யார்மேற்றாக் கொள்ளினும் கொண்டீக; காணுங்கால்
ஊர்மேற்ற தாமமணர்க்(கு) ஓடு. 231

- பழமொழி நானூறு

பொருளுரை:

ஆராயுமிடத்து சமணர்களுக்கு (அவர்கள் இரந்துண்ணும்) ஓட்டில் இடும் அறச்செயல் ஊரின் கண்ணதாம்; அதுபோல, போரினை விரும்பி ஏற்றுக்கொள்வேம் என்னும் வீரர்கள் மாலை பொருந்திய நீண்ட மார்பினையுடைய தம்முடைய அரசன் போருக்குச் செல்க என்ற குறிப்புடன் நோக்கியவிடத்து அந்நோக்கினைப் பொதுவாக நோக்கினான் என்று கொள்ளல் வேண்டுமோ?

அரசன் யார்மாட்டு அந் நோக்கினைக் கொண்டானாயினும் தன்னை நோக்கினானாகக் கொள்க.

கருத்து:

அரசன் குறிப்பினை அறிந்து ஆராய்தலின்றி போரிற்புகுதல் வீரர்களுடைய கடமையாம்.

விளக்கம்:

ஓட்டிலிடும் பயன் ஊரிலுள்ளார் மேற்றாயினவாறு போல, முற்பட்டுச் செல்லின் வெற்றியால் வருஞ் சிறப்புச் சென்றார் மேற்றாகும். 'போர் ஏற்றும் என்பார்' என்றது,

'விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்குந்தன் நாளை எடுத்து' 776 படைச்செருக்கு - என்றலின்.

இதனால் வீரர் போரில் விருப்பமுடையராயிருத்தல் வேண்டும் என்பது அறியப்படும்.

'ஊர்மேற்றதாம் அமணர்க்கு ஓடு' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Dec-22, 1:26 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 16

சிறந்த கட்டுரைகள்

மேலே