485 கள்ளூன் களவாடாவிடில் கயிறுகொண்டு தூக்கிடுக – கணிகையரியல்பு 12

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)

கோடுமுடல் மாமியெனை மதுவுடன்பு லால்திருடிக்
..கொணர்தி யென்றாள்
பாடுபெறும் பார்ப்பானா னென்றேன்மற் றவையுண்ணப்
..பவம்போ மென்றாள்
நாடும்வசை யுயிருய்யே னென்றேனீ மாய்ந்திடின்முன்
..னான்கொ டுத்த
ஓடுமற்ற மருகர்க்காம் நான்றுகொள்நீ யெனக்கயிறொன்(று)
..உதவி னாளே. 12

– கணிகையரியல்பு, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

கூனல் வாய்ந்த தாய்க்கிழவியாம் மாமி என்னைக் கள்ளும் ஊனும் களவு செய்து கொண்டு வரும்படி கட்டளையிட்டாள்.

`நான் சிறப்பு மிக்க பார்ப்பானன்றோ? எனக் கூறினேன். `கள்ளும் ஊனும் உண்டால் உன்னுடைய பாவம் எல்லாம் அகலும், என்றாள். `

ஐயோ! நாடு பழியுரைக்கும்; யானும் உயிருடன் வாழ முடியாது, என்று கூறினேன்.

`நீ மாண்டுவிட்டால் உன்கையில் நான் தந்த பிச்சை ஓடு இனியுள்ள மருகர்களுக்கு ஆகும். நீ தூக்கிட்டுக்கொண்டு இறந்துவிடு, என்று கயிறொன்று தந்துதவினாள்.

கோடு-கூனல். பாடு-சிறப்பு. வசை-பழி. நான்று கொளல்-தூக்கிட்டுக் கொளல்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Dec-22, 8:00 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 11

மேலே