484 பொதுமகட் சேர்வோர் பொல்லா விலங்கொப்பர் – கணிகையரியல்பு 11

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)

சுவையுணவு தானிருக்க மலந்தேடி யோடுகின்ற
..சுணங்கன் போலும்
குவையதனிற் கிடந்துறுநல் இடநீங்கித் திரிகின்ற
..கோகு போலும்
நவைதீர்தண் நதித்தூநீர் அருந்தாதங் கணநீரை
..நாடல் போலுஞ்
சிவையனைய காந்தையரை வெறுத்தசடர் வேசையரைச்
..சேர்வார் மாதோ. 11

– கணிகையரியல்பு, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

தெய்வத் திருவருள் நங்கையை ஒத்த கற்புறு மனைவியரை வெறுத்து ஒதுக்கிப் பொதுமகளிரைச் சேரும் கீழோர், இனிமையுள்ள உணவுகளிருப்பவும், அவற்றை அகற்றி மலத்தை விரும்பி ஓடுகின்ற நாயையும், நல்ல இடத்தை விட்டுக் குப்பைமேட்டில் கிடப்பதற்குத் திரிகின்ற கழுதையையும், மாசில்லாத தூய யாற்றுநீர் பருகாது சாக்கடைக் கழிவுநீரைக் குடிக்க ஓடும் தாழ்ந்தோரையும் ஒப்பர்.

சுணங்கன் - நாய். குவை - குப்பை. கோகு - கழுதை. அங்கணம் - சாக்கடை. சிவை - அருள்மங்கை. அசடர் - கீழோர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Dec-22, 7:55 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 11

சிறந்த கட்டுரைகள்

மேலே