433 உணவின் வழியே உருக்கொண்டது உடம்பு - யாக்கை நிலையாமை 15
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)
(காய் வருமிடத்தில் விளம் வரலாம்)
ஆதியிற்புல் லிலைகனிகாய்த் தானியமாய் மீன்பறவை
..ஆடு மாடாய்
மேதினியி லிருந்துதாய் தந்தையுடற் சேர்ந்தொருநாள்
..வெளியே வந்தங்(கு)
ஓதியபண் டங்கள்தின்று பெருத்திறந்து பலசெந்துக்
..குணவாய்ப் பஞ்ச
பூதியமாய் நாசமாய்ப் போம்நெஞ்சே நாஞ்சுமக்கும்
..பூட்சி தானே. 15
- யாக்கை நிலையாமை, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
”நெஞ்சே! ஆரம்பத்தில் புல், இலை, கனி, காய், தானியம், மீன், பறவை, ஆடு, மாடாய் உலகத்தில் இருந்தோம்.
பின் தாய், தந்தை உண்ணும் உணவில் சேர்ந்து அவர்கள் வழிக் கலந்து தாய் கருவிற் சென்று வெளியே வருகின்றோம்.
பின் கிடைக்கும் பண்டங்கள் தின்று பெருத்தோம். பின் இறந்து பல சிற்றுயிர்க்கு உணவாகி, எஞ்சியவை ஐம்பூதங்களுடன் கலந்து அழிந்தன.
இத்தன்மையாக அழியும் உடம்பையே நாம் சுமக்கிறோம்” என்கிறார் இப்பாடலாசிரியர்.
செந்து - சிற்றுயிர். பஞ்சபூதியம் – நிலம், நீர், நெருப்பு, காற்று, விசும்பு, நாசம் - அழிவு. பூட்சி - உடல்.