432 ஆடு மாடு நெல்லால் ஆகும் உடலுக்கும் அப்பெயர் - யாக்கை நிலையாமை 14
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)
தொல்லுலகிற் புல்லிலையுண் ணாடுமுத லுயிர்களைநற்
..சுரபிப் பாலை
நெல்லுடன்பல் தானியத்தைக் காய்கனியைக் கிழங்கிலையை
..நிதமு முண்டு
மல்லுறவே வளருமிந்தக் காயத்தை மரமென்றும்
..மாடா டென்றும்
புல்லென்றும் நெல்லென்றுஞ் செடியென்றுங் கொடியென்றும்
..புகல லாமே. 14
- யாக்கை நிலையாமை, நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”மனமே! பழைமையான இவ்வுலகில் புல், இலை முதலியவற்றை உண்டு வாழும் ஆடு முதலிய உயிர்களைக் கொன்று அதன் உடம்பையும், தூய பசுவின் பாலையும், நெல் முதலாகப் பல்வேறு தானியங்களையும், காய் கனி கிழங்கு கீரை முதலிய உணவையும் நாளும் உண்டு செழிப்புடன் இந்த உடம்பை வளர்க்கிறோம்
எனவே, இந்த உடம்பை மரம், ஆடு, மாடு, புல், நெல், செடி, கொடி என்றும் சொல்லலாமல்லவா?” என்கிறார் இப்பாடலாசிரியர்.
தொல் - பழைய. சுரபி - பசு. மல்லல் - செழிப்பு