118 கற்பிலாள் தாலி கழுத்துறு சுருக்கே - கணவன் மனைவியர் இயல்பு 10
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)
தாங்குபொருள் சுட்டழித்துத் தானுமழி யுங்கனல்போல்
..தலைவ னெஞ்சைத்
தீங்குகளாற் சுடுமனைவி தன்வாழ்வைக் கெடுத்தலால்
..செழுங்கண் டத்தில்
தூங்குதிரு நாணினா லென்னபய னதைக்கழுத்திற்
..சுருக்கிக் கொண்டு
தேங்குமுயிர்ப் பொறைநீக்கில் பூமகடன் பெரும்பொறையுந்
..தீரு மன்றே. 10
- கணவன் மனைவியர் இயல்பு, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
தன்னைத் தாங்கும் பொருளாகிய விறகைச் சுட்டு எரித்துத் தானும் அதனுடன் எரிந்து அழிந்து போகும் நெருப்பு போல, தன் கணவனின் நெஞ்சத்தைத் தன் ஒழுக்கமில்லாத தீய செயல்களால் சுடும் மனைவி தன் வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்கிறாள்.
அத்தகைய பெண்ணுக்கு தன் செழுமையான கழுத்தில் பயனற்றுத் தொங்குகின்ற மதிப்பு மிக்க தாலியினால் பயன் என்ன? அதைவிட அத்தாலிக் கயிற்றையே கழுத்துச் சுருக்காகக் கொண்டு, வாழுகின்ற உயிராகிய சுமையை விடுவது நல்லது. நிலத்துக்கும் பாரமாக உள்ள சுமையும் நீங்குமல்லவா! என்றும் பெண்கள் கற்போடு வாழ்வதன் அவசியத்தை வலியுறுத்துகிறார்.
கனல் - நெருப்பு. திருநாண் - தாலி. பூமகள் - நிலம். பொறை - சுமை.