சிந்தனைக்கு எதிராய்
சிந்தனைக்கு எதிராய்
சென்னியப்பா காரை கொஞ்சம் “நல்ல ஸ்டார் ஓட்டலா” பார்த்து ஒதுக்கி நிறுத்து. தன் கார் டிரைவரிடம் சொர்ணலதா சொன்னாள். பக்கத்தில் உட்கார்ந்திருந்த அவள் கணவன் அவளை பார்க்க, சாப்பிட்டுட்டு போயிடலாம். அங்க போய் சேரும்போதே சாயங்காலமாயிடும், அப்பத்தான் அங்க சமைக்கவே ஆரம்பிச்சிருப்பாங்க, சொல்லிக்கொண்டே தூங்கிய நிலையில் இருந்து இரு குழந்தைகளையும் எழுப்பினாள்.
எந்திரிங்க, சாப்பிட்டுட்டு வந்துடலாம், அந்த காரில் இவர்கள் இருவரின் மடியில் அடித்து பிடித்து சாய்ந்து தூங்கி கொண்டிருந்த இருவரும் சிணுங்கி முணங்கியபடியே விழித்தார்கள்.
கோயமுத்தூரில் இருந்து ‘காலை ஒன்பது மணிக்கு கிளம்பியது. திருச்சியில் நாளை விடியற்காலையில் நடக்க இருக்கும் ஒரு கல்யாணத்துக்கு போக வேண்டி கிளம்பியது.
கார் வழியில் தெரிந்த பெரிய ஓட்டல் ஒன்றை கண்டதும் மெல்ல சென்று வசதியாகவும் ஒரமாகவும் “கார்கள் நிறுத்துமிடம்” என்னும் பல்கை இருந்த இடத்தில் நின்றது. இறங்கியவுடன் “சளேரென்று” வெயில் முகத்தில் அடிக்க, “அப்பா என்ன வெயில்” மணி எவ்வளவு இருக்கும்? கணவனிடம் கேட்டாள்.
இரண்டு மணி இருக்கும், சீக்கிரம் நடங்க உள்ளே போயிடலாம், சொர்ணலதா சொல்லி விட்டு டிரைவரிடம் நீயும் சாப்பிட்டுட்டு வந்துடு பர்சிலிருந்து இருநூறு ரூபாய் நோட்டொன்றை எடுத்து கொடுத்தாள்.
குளிர் சாதன வசதி செய்யப்பட்டிருந்த அந்த அறைக்குள் உட்கார்ந்தவர்கள் மேசையின் மேல் வைக்கப்பட்டிருந்த மெனு கார்டை எடுத்து பார்த்து எதை சொல்லலாம் என்று யோசித்து கொண்டே கண்களால் மேய்ந்தாள்.
அவளின் மேசை அருகே வந்து நின்ற பேரரிடம் என்னென்ன வேண்டும் என்று “ஆர்டர்” செய்தாள். அவர் அதை ஒரு குறிப்பு எடுத்தபடியே இன்னும் பத்து நிமிசத்துல வந்துடும், சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
அவர் எழுதிய தோரணை, இவர்கள் கேட்ட கேள்விகளுக்கு சொன்ன பதில் இவளுக்கு இதற்கு முன் இவரை எங்கேயோ பார்த்திருக்கிறோமோ என்னும் சிந்தனையை தோற்றுவித்தது.
யாராய் இருக்கும்? அவள் சிந்தித்து கொண்டிருக்கும்போதே அவர் அங்கிருந்து நகர்ந்து விட்டார். என்றாலும் இவளுக்கு மட்டும் இவரை எங்கே பார்த்திருக்கோம் என்னும் சிந்தனையே மனதுக்குள் ஓடியது.
சட்டென ஞாபகம் வந்து விட்டது, ஆறாவதிலிருந்து பத்தாவது வரை வகுபில் ஒன்றாக படித்தவன், கடைசி பெஞ்சில் உட்கார்ந்து எல்லோரையும் கலாட்டா செய்து கொண்டிருந்தவன். வகுப்பில் ஆசிரியர் வராத போது மேடையேறி வாத்தியாரை போலவும், சினிமா கதாநாயகன் போலவும் ‘மிமிக்ரி’ செய்து, கிண்டலும் கேலியும் செய்து காட்டியவன். அவன் பெயர் கூட..ராவில தொடங்குமே, அட ராம்குமார், அப்பொழுதே அவனை எல்லா “டீச்சர்சும்” கரித்து கொட்டி கொண்டே இருப்பார்கள், இவனெல்லாம் எப்படி உருப்பட போகிறான்? என்று. அது சரியாத்தான் போச்சு, இப்ப ஒரு சர்வரா இவனை நானே ஓட்டல்ல பாக்க வேண்டியதா போச்சு, அவனேதான். அவளுக்கு ‘மளமளவென’ அவனை பற்றிய ஞாபகங்கள் வந்து விட்டன.
ஆனால்…! இப்பொழுது கணவரிடம் அறிமுகப்படுத்த முடியுமா? இருவரும் அந்தஸ்தில் இருப்பவர்கள், அதிகாரிகளாகவும் இருக்கிறவர்கள். ஓட்டலில் ‘சர்வர்’ வேலை செய்து கொண்டிருப்பவனை தன்னுடன் படித்தவன் என்று எப்படி அறிமுகப்படுத்துவது?
அவர் சொன்னது போலவே பத்து நிமிடத்தில் சிறிய தள்ளுவண்டி ஒன்றில் வைத்து ஆர்டர் எடுத்தவரே கொண்டு வந்தார். அனைத்தையும் மேசையின் மேல் வைத்து விட்டு நீங்கள் சொன்னவைகள் எல்லாம் வந்து விட்டதா? என்று சோதிக்க சொன்னார். சொல்லியிருந்த அனைத்து அயிட்டங்களும் வந்து விட்டதாக சொர்ணலதா அவரிடம் சொன்னாலும் அவர் முகத்தை பார்க்காத வண்ணமே பதில் சொன்னாள். எங்கே தெரிந்து கொண்டு பேசி விட்டால்..
ஓ.கே மேடம், வேற எதுனாலும், அதோ அந்த மணிய அழுத்துங்க, சொல்லி விட்டு அந்த தள்ளு வண்டியை தள்ளி கொண்டு சென்று விட்டார். சே, நம்முடன் படித்தவன், அதுவும் ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாவது வரை படித்தவன், அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கலாம், நினைத்தாலும், அப்படி அறிமுகப்படுத்தி இருந்தால் நம்மை விட அவருக்குத்தான் சங்கடமாக இருக்கும் அதனால் பேசாமல் இருந்ததுதான் சரி, பலதும் நினைத்தபடியே சாப்பிட ஆரம்பித்தாள்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆனது. எல்லோரும் சாப்பிட்டு முடிக்க, முடித்தபின் மேசையில் இருந்த மணியை அடித்தாள். ஒருவர் உள்ளே வந்தார். இவர்கள் அருகில் வந்தவர் வேறு ஏதாவது சாப்பிடுகிறீர்களா? இல்லை போதும் பில் கொடுத்திடுங்க, பர்சை திறந்து பணத்தை எடுத்தாள், எப்படி டிப்ஸ் கொடுப்பது? இவர்கிட்டவே கொடுத்து முன்னாடி வந்தவர் கிட்ட கொடுத்திடுங்கன்னு சொல்லலாமா? பல யோசனைகள் இவளுக்கு.
மேடம் நீங்க முன்னாடி ரிசப்சன் போனீங்கன்னா போதும், அங்க நீங்க சாப்பிட்ட எல்லாத்துக்கும் பில் வந்திருக்கும், பேரர் சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
இது என்ன ஆச்சர்யமா இருக்கு? கணவனுடன் வியந்து பேசியபடி ரிசப்சன் அருகில் வந்தாள். அங்கு ஒரு இளம் பெண் உட்கார்ந்திருந்தாள். அவளுக்கு முன்னால் இருந்த திரையில் இவர்கள் சாப்பிட்டதற்கான விவரங்களும், அதற்கான “பில் தொகையும் தெரிந்தது.
பரவாயில்லையே வியந்து கொண்டே அவள் தொகையை எண்ணி ரிசப்சனில் இருந்தவரிடம் கொடுக்க சென்றாள்.
‘சாரி மேடம்’ நீங்க சாப்பிட்ட பில் ‘செட்டில்’ பண்ணிட்டாங்க, புன்னகையுடன் சொன்னாள் அந்த ரிசப்சன் பெண்.
அது எப்படி? நாங்கதான் இன்னும் சாப்பிட்டதுக்கு பணம் கட்டவே இல்லையே?
“யெஸ் மேடம்” நீங்க எங்க சேர்மனோட கிளாஸ்மேட் அப்படீங்கறதுனால இதுக்கு உண்டான தொகையை அவர் கட்டிட்டாரு. அவருக்கு திடீருன்னு ஒரு அழைப்பு வந்ததுனால அப்பவே கிளம்பி போயிட்டாரு, உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் ‘வாழ்த்துக்கள்’ சொல்ல சொன்னாரு, ஒரு பொக்கேயையும் எடுத்து நீட்டினாள்.
சொர்ணலதாவால் எதுவும் சொல்ல முடியவில்லை, சற்று முன் அவள் நினைத்து கொண்ட எல்லாமே அவளை பார்த்து நகைப்பது போலிருந்தது.