பெருநடை பெற்றக் கடைத்தும் வற்றாம் ஒருநடை கீழ் – நாலடியார் 343

நேரிசை வெண்பா

பெருநடை தாம்பெறினும் பெற்றி பிழையா
தொருநடைய ராகுவர் சான்றோர்; - பெருநடை
பெற்றக் கடைத்தும் பிறங்கருவி நன்னாட!
வற்றாம் ஒருநடை கீழ் 343

- கீழ்மை, நாலடியார்

பொருளுரை:

விளங்குகின்ற அருவிகளையுடைய சிறந்த மலைநாடனே!

உலகிற் பெருமித நிலையைத் தாம் பெற்றாலும் தம்பெருந்தன்மையாகிய இயல்பு வழுவாது என்றும் ஒருதன்மையாராய் விளங்குவர் மேலோர்;

பெருமித நிலையைப் பெற்றவிடத்தும், கீழ் மகனும் என்றுந் தனது கீழ்மையியல்பு தோன்ற ஒரு நடையாய் ஒழுகவல்லவனாவன்.

கருத்து: செல்வ நிலையிலும் கீழோர் கீழோராகவேயிருப்பர்.

விளக்கம்:

நடை - செல்வப்போக்கு; பெறினுமென்னும் உம்மை பெறாதிருந்த காலத்துமென இறந்தது தழீஇயது. பெற்றக்கடைத்து மென்னும் உம்மையும் அற்று; கீழுமென எச்சவும்மை கொள்க;

வல்லதென்னுங் குறிப்பானும் ஒரு நடையென்னுங் குறிப்பானும் கீழுஞ் சான்றோரொப்ப ஒரு நடைய ராகுவர் என்றுரைக்கப்பட்டது

செல்வாக்குக்கேற்ற பெரும்போக்கைப் பெறாமல் தமது கீழ்மையியல்பையே கீழோர் மேற்கொண்டிருப்பர் என்பது!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Dec-22, 7:55 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 11

மேலே