459 இறந்தவர்க்காக யாரும் இறப்பதில்லை - அறஞ்செயல் 11

அறுசீர் விருத்தம்
(காய் 4 / மா தேமா)

ஓருயிரீ ருடலென்ன நட்டமைந்தர் மாத’ர்’நம(து)
..உயிர்நீங் கிற்றம்
ஆருயிரைத் துறப்பரோ அழுவதுந்தம் முணவுவைக்க
..அமைந்த பாண்டம்
பேருலகி லுடைந்ததென அழுவதன்றி நமக்கிரங்கும்
..பேரிங் குண்டோ
சாருமிவர் நேயமதாற் பவஞ்செய்து வீடிழத்தல்
..தகுமோ நெஞ்சே. 11

- அறஞ்செயல், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”மனமே! ஓர் உயிர், இரண்டு உடல் என்று அன்பு கொண்ட பிள்ளைகளும் மனைவியும் நம் உயிர் நீங்கினால், அவர்களுடைய அருமையான உயிரையும் விட்டு விடுவார்களா?

நம் பிரிவுக்காக அழுவதும் தங்களுக்கு வேண்டிய உணவின் கொள்கலமாகிய பாத்திரம் உலகில் உடைந்து விட்டதே என்ற வருத்தத்தினால்தான்.

அவ்வாறு இல்லாமல், நமக்காக வருந்துபவர் இங்கு உண்டா? எனவே, நம்மைச் சார்ந்தவர்களின் அன்பினால் அவர்களைப் பேணற் பொருட்டுப் பாவஞ் செய்து கடவுளின்பத்தை இழத்தல் பொருந்துமா? என்று கேட்கிறார் இப்பாடலாசிரியர். .

பவம் - பாவம். வீடு - கடவுளின்பம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Dec-22, 8:54 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 13

மேலே