458 உயிர்க்கு அறம் செய்யாமல் உடல் ஓம்பல் வீண் - அறஞ்செயல் 10

அறுசீர் விருத்தம்
காய் 4 / மா தேமா

பரியூர்வோன் தனைமறந்து பரிக்குபசா ரங்கள்மிகப்
..பண்ணல் போலும்
பெரியகட வுளைப்பணியா தாலயத்தை யலங்கரிக்கும்
..பித்தர் போலும்
அரியபொருள் வெளியிட்டுச் செப்பினைக்காத் திடல்போலும்
..ஆன்மா வுக்கே
உரியவறம் புரியாமல் உடலினைநீ யோம்புகின்றா
..யுள்ளப் பேயே. 10

- அறஞ்செயல், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”நெஞ்சமாகிய பேயே! குதிரை மீது ஏறி வருபவனைப் பணியாமல் குதிரைக்கு உபசாரம் செய்து மிகப் பணிவதும், முழு முதற் கடவுளை பணிந்து வழிபடாமல் திருக்கோவிலை அணி செய்யும் பித்தரின் செயலும், சிமிழினுள் இருந்த அருமணியை வெளியே எறிந்து விட்டு வெறுஞ்சிமிழைக் காக்கும் காவலும் பயன் இல்லாது வீணாகும்.

அதுபோல நீயும் சிறந்த உயிரை உணர்வு ஒழுக்கம் அறங்களால் பேணாது உடலை நீ ஊண் உடை அணிபூச்சு முதலியவற்றால் பேணுகிறாயே! அது வீணாகும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

பரி - குதிரை. உபசாரம் - பணிவிடை. செப்பு - சிமிழ். ஓம்புதல் - பேணுதல்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Dec-22, 8:49 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

மேலே