558 மனத்துக்கு வரம்பில் வலி வகுத்தோன் கடவுள் – தெய்வத்தன்மையும் வாழ்த்தும் 16
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
விளம் மா தேமா அரையடிக்கு
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் அருகி வரும்)
ககனமண் சராச ரங்கள்
..கலைகளுன் னுள்ள டக்கிப்
பகரொரு நொடிக்கு ளண்டப்
..பரப்பெலா முலாவித் துன்பஞ்
சுகமற மறமோர்ந் தாவி
..தூங்கினுந் தூங்கா தோங்கி
அகலுறு முன்னைச் செய்தோன்
..அவன்கொன்மற் றெவன்கொல் நெஞ்சே. 16
- தெய்வத்தன்மையும் வாழ்த்தும், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
மனமே! விண்ணும், மண்ணும், இயங்குதிணை நிலைத்திணைப் பொருள்களும், எல்லையில்லாத கலைகளும் உன்னகத்தடங்க நொடியளவுக்குள் பலகோடி அண்டங்களைச் சுற்றித் துன்பம், இன்பம், புண்ணியம், பாவம் இவற்றை ஆய்ந்து, உயிர் உறங்கினும் நீ உறங்காது எல்லா இடங்களையும் கடந்து வரும் ஆற்றலை உனக்குத் தந்தவன் யாவன்? அவனே கடவுள்.
சரம் - இயங்குதிணைப் பொருள். அசரம் - நிலைத்திணைப் பொருள். அறம்-புண்ணியம். மறம்-பாவம். அகலுறல்-கடத்தல்.