பனையனைத் தென்றுஞ் செயினும் நன்றில நன்றறியார் மாட்டு – நாலடியார் 344
நேரிசை வெண்பா
தினையனைத்தே யாயினும் செய்தநன் றுண்டால்
பனையனைத்தா உள்ளுவர் சான்றோர்; - பனையனைத்
தென்றுஞ் செயினும் இலங்கருவி நன்னாட
நன்றில நன்றறியார் மாட்டு 344
- கீழ்மை, நாலடியார்
பொருளுரை:
விளங்குகின்ற அருவிகளையுடைய உயர்ந்த மலைநாடனே!
தினையளவினதே யாயினும் செய்த உதவிமுன் இருக்குமானால் அதனைப் பனையளவினதாகக் கருதிக் கனிந்திருப்பர் மேலோர்;
நாளும் பனையளவு உதவி செயினும், நன்மையறியாக் கீழோரிடத்தில் அவை சிறிதளவும் நன்றி பாராட்டுதல் இல்லாதனவாகும்.
கருத்து:
கீழ்மை நன்றி மறக்கும் இயல்புடையது!
விளக்கம்:
உள்ளுதல், உள்ளிக் கனிதல்; "கன்றுள்ளிய புனிற்றா"1 என்பது காண்க.
‘நன்றில' என்னுமிடத்து ‘நன்று' நன்றியையும் ‘நன்றறியார்' என்னுமிடத்து அது மேன்மையையும் உணர்த்தும்.