பெரியார்

*பெரியார்*

அடுக்கு மொழி இல்லை
அழகு நடை இல்லை
அடிக்கடி இடையே
வரும் வார்த்தையும் கூட
*வெங்காயம்*
என்பது தான்.

ஆனாலும்
உன் பேச்சின் அக்னியில்
இன்றும் தகிக்கிறது
எம் மண்ணும்
எம் சிந்தையும்.

படி தாண்டக் கூடாதென
முடக்கப்பட்ட பெண்களை
படி தாண்டி
படித்திட வா என்றாய்.

பணி செய்திடு
என்றாய்.
பணிக்கேற்ற
உடை உடுத்திடு
என்றாய்.

சிறு பிராயத்
திருமணம் கூடாதென்றாய்.

கைம் பெண்ணுக்கு
மறு வாழ்வு
உண்டென்றாய்.

பெண்ணடிமை
நீங்கிட
உனைப் போல்
குரல் கொடுத்த
இன்னொரு தலைவரில்லை.

அடிமைத் தனம்
கூடாதென்றாய்.

ஆண்டவனே
இல்லையென்றாய்.

ஆனாலும்
அவனை வழிபடும் உரிமை
அனைவருக்குமானது
என்றாய்.

பழம் பெருமை
கூடாதென்றாய்.

எதிர்காலத்தை
எதிர் நோக்கென்றாய்.

பேதம் பார்க்கும்
மனிதருக்கு
நாட்டின் சுதந்திரமும்
வீண் தான் என்றாய்.

தவறுகள் இல்லாத
தலைவனல்ல நீ.

ஆனால்
தவறென்று பட்டால்
விமர்சனம் செய் என்ற
ஒரே தலைவன்
நீ மட்டுமே.

சிந்தித்து முடிவெடு
என்றாய்.

ஆனால்
சிலையிலும் படத்திலும்
உனை இருத்தி விட்டு
சிந்தனையில் வைத்திட
மறந்து போனதை
என் சொல்ல...

ஆனாலும்
நீ வாழ்கின்றாய்
ஒவ்வொரு
உரிமைக் குரலின்
பின்னாலும்
உன் பேச்சு இருக்கிறது.

உன் நினைவு நாளில்
உன்னை நினைவு
கூர்வதும்
எங்கள் சிந்தனையை
இன்னும் தெளிவாக்கும்

- கமலநாதன்

எழுதியவர் : கமலநாதன் (24-Dec-22, 5:47 am)
சேர்த்தது : Kamalanathan S
Tanglish : periyaar
பார்வை : 472

மேலே