600 ஈன்றார் உடன்பிறந்தார் இவர்ப்பேணல் எழிலாம் – தாய் தந்தையரை வணங்கல் 2
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)
(காய் வருமிடத்தில் விளச்சீர் அருகி வரும்)
உரியவர்யா வரினுமனை தந்தையுற வேமுன்னா
..முவர்தாம் நம்மிற்
பெரியவராய் நம்பயனொன் றேகருதும் பெற்றியினாற்
..பெட்பி னன்னார்
பிரிய(ம்)பெறுப் பினையுணர்ந்தவ் வாறொழுகி யவரோடும்
..பிறந்த மைந்தர்
அரிவையரவ் வனைதந்தை யனையரென நினைத்தோம்பல்
..அழகாம் நெஞ்சே. 2
– தாய் தந்தையரை வணங்கல், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
மனமே! நமக்கு மும்மைக்கும் உரியார் எல்லாரினும் அன்னையும் அத்தனுமே முதன்மையராவர். அவரே எல்லா வகையானும் நமக்குப் பெரியவராவர். அவர் நம்முடைய நன்மையொன்றே கருதும் நல்லுளத் தன்மையர்.
அத்தன்மையினால் அவர் தம் விருப்பை வெறுப்பைக் குறிப்பாலுணர்ந்து அவர் விருப்பின்படி ஒழுகல் வேண்டும். அவருடன் பிறந்த ஆண் பெண் இருபாலாரையும் அவரெனவே கொண்டு பேணல் வேண்டும். அன்பு செய்து அவர்கள் மகிழுமாறு அடங்கி யொழுகல் வேண்டும்;
அதுவே என்னோற்றான் கொல் என்னும் சொல்லையுண்டாக்கும் நன்மக்கட்குரிய தக்க எழிலாகும்.
உரிமை - நன்மைநாடும் வேட்கை. பிரியம் - விருப்பம். மைந்தர் - ஆடவர்; ஆண். அரிவையர் - மகளிர்; பெண்.

