247 உலகியல் அழிப்பவர்களால் பழி பாவம் பெருகும் – கைக்கூலி 3
கலி விருத்தம்
விளம் விளம் மா கூவிளம்
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச் சீர் வரலாம்)
கொலைஞருஞ் சோரருங் கொடிய வஞ்சரும்
நிலைபெற வவர்கையி னிதியைக் கொண்டுதண்
அலைகடல் உலகியல் அழிக்குந் தீயர்பால்
மலையெனப் பாவமும் பழியும் மண்டுமே. 3
- கைக்கூலி
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”இவ்வுலகில் கொலைச் செயல் புரிவோரும், கள்வரும், துரோகம் செய்து ஏமாற்றும் கொடியவர்களும் நிலைபெறும்படி, அவர்களுக்குத் தகுந்த தண்டனை அளிக்காமல் அவர்கள் கையிலிருந்து தரும் கைக்கூலியைப் பெற்றுக்கொண்டு,
குளிர்ந்த அலைகடலால் சூழ்ந்த உலகவாழ்வைக் கெடுக்கும் முறைமன்றக் கொடியவர்களால் பாவமும் பழியும் மலைபோல் பெருகும்” என்று கைக்கூலிக்கு எதிராக இப்பாடலாசிரியர் குரல் கொடுக்கிறார்.
சோரர் - கள்வர். நிதி - செல்வம், மண்டும் - பெருகும்.
குறிப்பு:
இப்பாடலாசிரியர் இருநூறு வருடங்களுக்கு முன் அவர் பணியாற்றிய காலகட்டத்தில் முறை மன்றங்களில் இருந்து வந்த குறைகளை மனதில் வைத்து எழுதியிருக்கிறார். இன்று பல துறைகளிலும் கைக்கூலி பெறுவதும் தருவதும் இன்றி செயல்கள் விரைந்து நடைபெறுவதில்லை என்ற அனுபவங்கள் அனைவருக்குமே இருக்கும்.