மண்ணியன் ஞாலத்து மன்னும் புகழ்வேண்டி - - கார் நாற்பது 8

இன்னிசை வெண்பா

மண்ணியன் ஞாலத்து மன்னும் புகழ்வேண்டிப்
பெண்ணிய னல்லாய் பிரிந்தார் வரல்கூறும்
கண்ணிய லஞ்சனங் தோய்ந்தபோற் காயாவும்
நுண்ணரும் பூழ்த்த புறவு! 8

- கார் நாற்பது

பொருளுரை:

பெண் தகைமையையுடைய நல்லாய்! மண்ணானியன்ற உலகத்து நிலைபெறும் புகழை விரும்பி பிரிந்து சென்ற தலைவர் மீண்டு வருதலை கண்ணிற்கு இயற்றப்பட்டமையை தோய்ந்தவை போல காயாஞ் செடிகளும் நுண்ணிய அரும்புகள் மலரப் பெற்ற காடுகள் சொல்லும்!

பெண் இயல் - நாண் முதலியன; ‘அச்சமு நாணு மடனுமுந் துறத்த, நிச்சமும் பெண்பாற் குரிய வென்ப' என்று தொல்காப்பியம் கூறுவதுங் காண்க.

காயாமலர் அஞ்சனத் தோய்ந்தாற் போலும் என்பதனை ‘செறியிலைக் காயா அஞ்சன மலர' என்னும் முல்லைப்பாட்டானும் அறிக.

ஊழ்த்தல் - மலர்தல்; ‘இணரூழ்த்து நாறா மலர்' என்பது திருக்குறள். புறவு பிரிந்தார்வரல் கூறும் என முடிக்க.

எழுதியவர் : மதுரைக் கண்ணங் கூத்தனார் (25-Aug-25, 8:01 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 3

மேலே