488 பலர்மறைவாய் என்றும் பொதுமகள் வீட்டிருப்பர் – கணிகையரியல்பு 15

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)

கொடியாளன் பற்றபின்னர் பலர்நம்பால் வந்துன்னைக்
..கூடிக் கொண்டே
மிடியென்றும் வாழ்கவென்றார் ஏனென்றே முயிர்க்கினியாள்
..வீட்டில் நீவந்
தடிவைத்த போதெல்லாங் கூடையுறி பரண்கட்டில்
..அடிய டுக்கு
நெடியசிறை யிருந்தோமச் சிறையையுன்றன் வறுமைவந்து
..நீக்கிற் றென்றார். 15

– கணிகையரியல்பு
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

கொடியாளாகிய பொதுமகள் நம்மிடம் அன்பற்றபின், நாம் வீடு அடங்கினம். அப்பொழுது பலர் நம்மிடம் வந்து உன்னை இப்பொழுது கூடிக்கொண்டிருக்கும் வறுமை என்றும் நீங்காது உன்னுடனேயே வாழட்டும், என்றனர்.

யான் ஏன் என்று வினவினேன். (அதற்கு அவர்கள்) நீ, உயிர்க்கினியாளாகிய பொதுமகள் வீட்டில் அடி வைத்த போதெல்லாம் நாங்கள் உனக்கு அஞ்சி, பூனை எலி நாய் போல், கூடை, உறி, பரண்மேல், கட்டிற்கீழ், அடுக்குப்பானை மறைவு முதலிய இடங்களில் நெடுஞ்சிறை யிருந்தோம். உன்னுடைய வறுமை வந்து அந்நடுக்கத்தையும் சிறையையும் நீக்கிற்று, என்றனர்.

மிடி - வறுமை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Dec-22, 11:52 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 13

சிறந்த கட்டுரைகள்

மேலே