107 ஒற்றுமைசேர் உடன்பிறப்பை ஒருவரும் வெல்லார் - உடன் பிறந்தார் இயல்பு 4

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

ஒற்றையொண் சுடரினை யொழிக்கும் மெல்வளி
கற்றையாப் பலசுடர் கலப்பின் மாவளி
சற்றும்வெல் லாதுசூழ் தமர்ச கோதரர்
பற்றொடு மருவிடிற் படரு றார்களே. 4

- உடன் பிறந்தார் இயல்பு
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

ஒற்றைத் திரியில் தனித்து எரியும் ஒளிமிகுந்த சுடரினை சிறு காற்றும் அணைத்து விடும். ஆனால் பலதிரியும் ஒன்றாக்கிக் கற்றையாக அவைகள் சேர்ந்து எரியும் மிகுந்த ஒளியுடன் கூடிய சுடரினைப் பெருங்காற்றாலும் சிறிதளவு கூட அணைக்க முடியாது.

அது போல, ஒற்றுமையாகச் சேர்ந்து அன்பால் இணைந்த உடன்பிறந்த சகோதரர்கள் ஒருவரையொருவர் விட்டுக் கொடுக்காமல் பிடிப்புடன் சேர்ந்திருந்தால் அவர்களை வேறு எவரும் வெல்ல நினைக்க மாட்டார்கள் என்று இவ்வாசிரியர் உறுதியாகச் சொல்கிறார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Jan-23, 7:06 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 16

மேலே