106 குடும்பம் பேணாரைக் கொள்ளார் உயர்ந்தோர் - உடன் பிறந்தார் இயல்பு 3

மாயூரம் வேதநாயகம் பிள்ளை தன நீதினூலில் உடன் பிறந்தார் இயல்பு என்ற தலைப்பில் மூன்றாவது பாடலாக ’குடும்பம் பேணாரைக் கொள்ளார் உயர்ந்தோர்’ என்று தன் குடும்பத்தாரைப் பேணாதவனுடன் உயர்ந்த குணமுள்ளவர்கள் நட்புறவு கொள்ள மாட்டார்கள் என்கிறார்.

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில் ஒற்றோ தான் வரும். நெடில், நெடில் ஒற்று வராது)

பயந்தவர் சோதரர் தமரைப் பண்பொடு
வியந்துபே ணாதவன் வேறு ளோர்களை
இயைந்துபே ணானென எண்ணி நீக்குவர்
உயர்ந்தவ ரவனொடும் உறவு தன்னையே. 3

- உடன் பிறந்தார் இயல்பு, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

பெற்றோர்கள், உடன் பிறந்த சகோதரர்கள், உறவினர்களை நல்ல குணநலத்தோடு மகிழ்ந்து அன்போடு பேணாதவன், உறவல்லாத மற்றவர்களையும் அனுசரித்துப் பேணமாட்டான் என்று கருதி உயர்ந்த குணமுள்ளவர்கள் அவனுடன் தாங்கள் உறவு கொள்ளாமல் நீக்கிவிடுவர் என்று எச்சரிக்கிறார்.

பயந்தவர் - பெற்றோர், தமர் - உறவினர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Jan-23, 6:59 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 15

மேலே