191 இணங்காத் தலைவனை விட்டு ஏகல் நன்று - தாழ்ந்தோர் உயர்ந்தோர்க்கு அடங்கல் 4
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச்சீர் அருகி வரலாம்)
தலைவன்றீ யவனே லன்னான்
..தனைவிடுத் தேகல் நன்றாம்
விலைதரு மவன்பால் வைகி
..விரவுறுங் காறுஞ் சேடர்
உலைவில்தம் வாழ்நா ளன்னாற்(கு)
..உரியதென் றுனிய வன்சொல்
நிலையுறப் பணிகள் செய்து
..நெறிவழி நிற்றல் சீரே. 4
- தாழ்ந்தோர் உயர்ந்தோர்க்கு அடங்கல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”முதலாளி தீயவனாக இருந்தால் அவனை விட்டு விலகிச் செல்வது நல்லது. கூலி தரும் அவனோடு சேர்ந்து தங்கி இருக்கும் வரையில் வேலையாளர் மாறுபாடில்லாமல் தம் வாழ்நாளை அவர்க்கு உரிய தென்று கருதி அவன் சொல்வழி ஏவல் செய்து நேர்மையான வழியில் நடப்பதே ஒழுக்கமாகும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.
தலைவன் - முதலாளி. விலை - கூலி.
வைகு – தங்கு, உலைவு – மாறுபாடு, உனி - கருதி,
சேடர் - வேலையாளர்.