320 உடலுள் அழுக்கை நினைத்தால் செருக்குறார் - அழகால் செருக்கல் 4

சந்தக் கலி விருத்தம்
(கனி கனி கனி விளம்)

கட்புலன்றனை யேகவர்ந்திடு கவினுளேமென வனுதினம்
பெட்புறப்புவி யிற்செருக்குதல் பெருமையன்றொளிர் பேருடல்
உட்புறத்தினை யேதிருப்பிடி லோங்கலாமலக் காடுசூழ்
மட்புறச்சுவர் தீட்டுசித்திர மானுநம்மெழில் நெஞ்சமே. 4

- அழகால் செருக்கல், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”நெஞ்சே! கண்களைக் கவரும் அழகு உடையேன் என்று அனுதினமும் விருப்புடன் உலகில் தற்பெருமை கொள்ளுதல் மாண்பாகாது.

அழகுடன் விளங்குகின்ற பெரிய உடம்பின் உட்பக்கத்தைத் திருப்பினால் அங்கெல்லாம் மலை போன்ற மலங்களால் சூழ்ந்த மண்சுவர் மேல் எழுதிய சித்திர அழகைப் போன்றதாகும் நம் உடல் அழகு” என்கிறார் இப்பாடலாசிரியர்.

கவரும் - இழுக்கும். கவின்- அழகு.
பெட்புற - விரும்ப. ஒளிர் - விளக்கம்.
ஓங்கல் - மலை. மானும் - ஒக்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Jan-23, 3:20 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

சிறந்த கட்டுரைகள்

மேலே