321 நயனிலான் உடலழகை நல்லோர் நயவார் - அழகால் செருக்கல் 5
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச் சீர் அருகி வரலாம்)
மண்ணிற்செய் பாவை மீது
..வயங்குபொற் பூச்சோ தண்பூங்
கண்ணியை மாற்றிச் சூடுங்
..காட்சியோ பழம்பாண் டத்திற்
பண்ணிய கோல மோநற்
..பண்பொடு ஞானங் கல்வி
புண்ணிய மேது மில்லான்
..பூண்டபே ரெழிலு டம்பே. 5
- அழகால் செருக்கல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”நல்ல குணம், மெய்யுணர்வு, படிப்பு, நலத்தொண்டு போன்ற ஒன்றும் இல்லாதவன் கொண்டுள்ள உடலழகு மண்ணால் செய்யப்பட்ட பாவை மீது விளங்குகின்ற பொன்னாலான பூச்சோ? குளிர்ச்சியான அழகிய பூமாலையைத் துடைப்பத்தில் கட்டிக் காணும் காட்சியோ? பழைய பாத்திரத்தில் செய்த அழகோ? என்று கேட்கிறார் இப்பாடலாசிரியர்.
வயங்கு - விளங்கு. மாறு - துடைப்பம். புண்ணியம் - நலத்தொண்டு.