தலையே தவம் முயன்றுவாழ்தல் ஒருவர்க்கு – நாலடியார் 365

நேரிசை வெண்பா

தலையே தவமுயன்று வாழ்தல், ஒருவர்க்(கு)
இடையே இனியார்கட் டங்கல், - கடையே
புணராதென் றெண்ணிப் பொருள்நசையால் தம்மை
உணரார்பின் சென்று நிலை 365

- பன்னெறி, நாலடியார்

பொருளுரை:

மக்கட்பிறவியில் வந்த ஒருவர்க்கு தம் வாழ்க்கையில் தவமுயற்சியுடையராய் வாழ்தல் தலையானதாகும்;

தமக்கு இனியராயிருக்கும் மனைவி மக்கள் முதலிய உறவினரிடத்து மனந்தங்கி அவாவோடு ஒழுகுதல் இடைத்தரமான வாழ்வாகும்;

மேற் கூறிய இருவகை வாழ்வின் முயற்சியும் தமக்குக் கைகூடாதென்று நினைந்து வெறும்பொருள் விருப்பத்தால் தம் குடிப்பிறப்பு கல்வி முதலிய தகுதிகளையுங் கருதிப் பாராது நடத்துஞ் செல்வர்களின் பின் சென்று நிற்கும் அடிமை நிலை கடைப்பட்ட வாழ்வாகும்.

கருத்து:

வாழ்க்கையிற் பற்றின்றி ஒழுகும் அறப் பணியாளர் தலையான முயற்சியுடையோராவர்.

விளக்கம்:

ஒருவர்க்கு என்பதைப் பிறவற்றிற்குங் கூட்டுக. தலை, இடை, கடையென ஈண்டுக் கூறிய வாழ்வு முறையே அருள் வாழ்வும், அன்பு வாழ்வும், அடிமை வாழ்வுமாகும்.

பிறர்பால் அடிமைத் தொழில் பூண்டிருப்போர் முறையாக மனையறம் நடத்துதல் இயலாதாகலின் அதனை வேறு பிரித்துக் கடையாக்கினார்.

பொருண் முயற்சி இம்மூன்றற்கும் பொதுவெனக்கொள்க.

பொருள் ஈட்டிப் பலர்க்கும் உதவியாய் வாழ்தலும், தமக்கினியார்க்கு மட்டுமே உதவியாய் வாழ்தலும், தமக்கு இனிமையின்றி உயிர்வாழ்தலும் கருதினமையின் முறையே இவை தலை இடை கடையாயின.

பொருணசை யாலென்றார், கண்டது பயனன்று நசையே யென்றற்கு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Jan-23, 10:49 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

மேலே