கடைகள் இனிதுண்ணேம் ஆரப் பெறேமியாம் என்னும் கண்பா டிலர் – நாலடியார் 366

இன்னிசை வெண்பா

கல்லாக் கழிப்பர் தலையாயார்; நல்லவை
துவ்வாக் கழிப்பர் இடைகள்; கடைகள்
இனிதுண்ணேம் ஆரப் பெறேமியாம்2 என்னும்
முனிவினாற் கண்பா டிலர் 366

- பன்னெறி, நாலடியார்

பொருளுரை:

மக்களில் உயர்ந்தோர் நற்கருத்துக்களை ஆழ்ந்து அறிந்து தெளிவு பெறுதலை மேற்கொண்டு அம்முறையில் தம் வாழ்நாட்களைக் கழிப்பர்;

இடைத்தர மக்கள் இனிய பண்டங்களை ஐம்புலன்களானும் நுகர்ந்து இன்புறுதலை மேற்கொண்டு அம் முறைமையில் வாழ்நாள் கழிப்பர்;

கடைத்தர மக்கள் ‘யாம் பண்டங்களை இன்பமாய் நுகரப் பெற்றிலேம், நிறையப் பெற்றிலேம்' என்னும் வெறுப்பினால் இரவிலும் உறக்கமில்லாதவர் ஆவர்.

கருத்து:

உலகப் பொருள்களின் வாயிலாகத் தம்மைத் தெளிவுடையராக்கிக் கொள்ளும் மக்களே உயர்ந்தோர் ஆவர்.

விளக்கம்:

கற்றல், ஆழ்ந்துணர்ந்து தெளிவு பெறுதல்.

ஒரு பொருளைக் காண நேர்ந்தால் அதுகொண்டு தலையானவர் தமதறிவைத் தெளிவு செய்ய முயல்வரெனவும், இடைப்பட்டவர் புலன்களால் நுகர்ந்தின்புற முயல்வரெனவும், கடைப்பட்டவர் ஏதும் பெறாராய் ஆற்றாமை மட்டுங் கொண்டு அமைதியின்றி மெலிவர் எனவும் உணர்த்திற்று இச்செய்யுள்;

கண்படுதல் - உறக்கங் கொள்ளுதல்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Jan-23, 10:57 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

மேலே