மாணாப் பகைவரை மாறொறுக்க அல்லாதார் - பழமொழி நானூறு 256
இன்னிசை வெண்பா
மாணாப் பகைவரை மாறொறுக்(க) அல்லாதார்
பேணா துரைக்கும் உரைகேட்(டு) உவந்ததுபோல்
ஊணார்ந்(து) உதவுவதொன்(று) இல்லெனினும் கள்ளினைக்
காணாக் களிக்கும் களி. 256
- பழமொழி நானூறு
பொருளுரை:
மாட்சிமையில்லாத பகைவர்களை எதிர்த்து நின்று தண்டிக்க முடியாதவர்கள் தம் பகைவரைப் பொருட்படுத்தாது பிறர் இகழ்ந்து கூறும் சொற்களைக் கேட்டு மகிழ்ந்தவர்களைப் போன்று,
உணவாக உண்டு அதனால் அடையும் பயன் ஒரு சிறிதும் இல்லை யெனினும் கள்ளினைக் கண்ட அளவில் மகிழும் கீழ்மகனைப் போல்வர்.
கருத்து:.
கீழ்மகன் கள்ளினைக் கண்ட அளவிலேயே மகிழ்வு எய்துவான்.
விளக்கம்:
தம் பகைவரை ஒருவர் இகழ்ந்துரைக்கக் கேட்டால் தாம் பெறலான நன்மை சிறிதும் இல்லையாயினும், அவரை வென்றதுபோல் நினைத்து மகிழ்தல்போல, கீழ்மகன் கள்ளினைக் கண்ட அளவில் அடையும் பயன் இல்லையெனினும் அதனை உண்டதுபோல் நினைந்து மகிழ்ச்சி உறுவான்.
’கள்ளினைக் காணாக் களிக்கும் களி’ என்பது பழமொழி.
சிறந்த கட்டுரைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
