கொன்றபின் அல்லது உயக்கொண்டு புல்வாய் வழிப்படுவார் இல் - பழமொழி நானூறு 257

நேரிசை வெண்பா

அன்பறிந்த பின்னல்லால் யார்யார்க்கும் தம்மறையே
முன்பிறர்க் கோடி மொழியற்க - தின்குறுவான்
கொல்வாங்குக் கொன்றபின் அல்ல(து) உயக்கொண்டு
புல்வாய் வழிப்படுவார் இல். 257

- பழமொழி நானூறு

பொருளுரை:

தின்னும் பொருட்டு கொல்லுகின்றபடியே கொன்ற பின்னர் அல்லது தப்பிப்போன பின்னர் மானினது தசையை அடுதற்குரிய நெறியின்கண் நிற்றல் இலர்;

அதுபோல, தம்மாட்டு அவர் பூண்ட அன்பு அறிந்தபின்னரன்றி, யாவரே யாயினும் தமது சூழ்ச்சியை பிறரிடம் முற்பட்டு ஓடிச் சொல்ல வேண்டாம்.

கருத்து:

அன்புடையாரை அறிந்தே இரகசியத்தைக் கூறுக.

விளக்கம்:

மானைக் கொன்றபின்னர் அல்லது அதன் தசையைப் பக்குவப்படுத்தும் நெறியின்கண் நில்லார். அதுபோல, பிறர் தம்மீது பூண்ட அன்பை அறிந்தபின்னர் அல்லது, அவரிடம் முற்பட்டுத் தமது மறையை மொழியலாகாது. அடுதற்குரிய நெறியின்கண் நிற்றலாகாது; காயம் முதலியன சேர்த்து அரைத்தலும் பிறவும். அவர் நிலையறியாது தமது மறையை முன்பட்டுக்கூறின் நன்மை இல்லை யாதலோடு ஒருஞான்று தீங்கு உளவாயினும் ஆம்.

'கொன்றபின் னல்லது உயக்கொண்டு புல்வாய் வழிப்படுவார் இல்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Jan-23, 11:12 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

சிறந்த கட்டுரைகள்

மேலே