393 பிறர்க்குள்ளன நமக்கென்று உதவுவோர் பேரன்பர் - கைம்மாறு கருதா உதவி 11
எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா 3 காய் அரையடிக்கு)
சீவ அன்பு சுகுணங் களின்முதலாம்
= தீதி லன்பை யுடையோர் பிறர்துயர்தம்
ஆவ தென்ன அயர்வார் பிறர்சுகமும்
= தம்ம தென்ன மகிழ்வார் தினம்வணிகர்
மேவ லோடு கொளுவோர் வரவுன்னும்
= விதமெ னத்த மசகா யமதுறவே
யாவர் சார்வ ரெனவா சையினோக்கி
= ஏன்ற மட்டு நலமே புரிவாரால். 11
- கைம்மாறு கருதா உதவி, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”உயிருக்கு அமைந்துள்ள அன்பு, நல்ல பண்பு முதலியவற்றில் தீமையில்லாத அன்பையே கொண்டுள்ளோர், பிறர் துன்பம் தமதாகக் கொண்டு மனம் வருந்துவார். பிறர் கொள்ளும் இன்பத்தையும் கண்டு தமதென்று மகிழ்வார்.
நாள்தோறும் வணிகச் செட்டியார்கள் விருப்புடன் பண்டம் வாங்க வருபவர்களின் வரவையே நினைப்பது போல, பேரன்புடையோர் தம்முடைய உதவியைப் பெற்றுக் கொள்ள யார் வருவார்கள் என்று வாசல் வழி பார்த்திருந்து முடிந்த அளவு நல்லதே விரும்பிச் செய்வர்” என்கிறார் இப்பாடலாசிரியர்.
சுகுணம் - நல்ல பண்பு. தாவு - வருத்தம். அயர்வார் - மனங் கவல்வார். மேவல் - விருப்பம்.
உன்னும் - நினைக்கும். ஏன்றமட்டும் – முடிந்த அளவு. புரிவார் - விரும்பிச் செய்வார்.