394 அன்பின்றேல் யாரும் பேரின்பம் அடையார் - கைம்மாறு கருதா உதவி 12
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா மா)
எவ்வருணர் எச்சமயர் எப்பதியர் எத்தொழிலர்
..எனினும் நாணோ(டு)
அவ்வவர்க ளெவ்வமுரை யாமுனமு ணர்ந்துதவல்
..அன்பின் நிலையாம்
இவ்வரிய அன்புடைமை யின்றிநிரு வாணமுற
..எண்ணி விழைதல்
பௌவவுல கத்துருளில் தேரினைந டாத்தவுனு
..பான்மை நிகரால். 12
- கைம்மாறு கருதா உதவி, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”எந்தக் குலத்தினர், எந்த மதத்தினர், எந்த ஊர்க்காரர், எந்தத் தொழில் செய்வோர் என்றாலும், தங்கள் மானத்தை விட்டு வெட்கத்துடன் அவரவர்கள் தங்கள் துன்பத்தைச் சொல்லி தங்களுக்கு ஓர் உதவி வேண்டும் எனக் கூறுவதற்கு முன் குறிப்பால் உணர்ந்து உதவி செய்வது அன்பு நிலையாகும்.
இத்தகைய சிறந்த அன்பில்லாமல் வீடடையக் கருதி விரும்புவது கடல் சூழ்ந்த உலகத்தில் சக்கரமில்லாத தேரைச் செலுத்த நினைக்கும் தன்மைக்கு ஒப்பாகும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.
வருணம் - குலம். சமயம்- மதம், கொள்கை.
நாணம் - மானம். எவ்வம் - துன்பம்.
நிருவாணம் - வீடு; பேரின்பம். பௌவம் - கடல். உருள் - சக்கரம்.பொருளுரை: