கைப்பாவை முதல் பாவை வரை

கை.பாவை : அடியே கோவை, எனக்கு ஏன்தான் கைவண்ணப்பாவை என்று பேர் வைத்தார்களோ, தெரியவில்லை?

கோவை: நீ பிறக்கும்போதே 'இவள் எல்லாக்கைவண்ணமும் தெரிந்த பெண்ணாகத்தான் இருப்பாள்' என்று உன் பெற்றோர்கள் உணர்ந்திருப்பார்கள் , அதனால் தான் கைவண்ணப்பவை என்று உனக்குப் பேர் வைத்திருப்பார்கள்.

கை.பாவை: நீ ஒன்னு கோவை. பள்ளிக்கூடச் சான்றிதழில் என் பெயரை கை. பாவை என்று கொடுத்தது மிகவும் பிரச்சினையாகப்போய்விட்டது. எல்லோருமே என்னைக் கைப்பாவை கைப்பாவை என்றே கூப்பிடுகிறார்கள். இப்போது என்ன செய்வது என்றே தெரியவில்லை.

கோவை: ஒன்று செய் கைப்பாவை. உன் பெயரைத் திருப்பாவை என்று மாற்றிக்கொள். அப்போது இந்தப் பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவிடும்.
கை. பாவை: இது நல்ல யோசனை கோவை. நான் உடனடியாக என் பெயரை மாற்றிக்கொள்ளும் வேலையில் இறங்குகிறேன்.

அதன் பிறகு இரண்டு மாதம் கழித்துத் தோழிகள் இருவரும் சந்திக்கின்றனர்.

கோவை: என்ன உன் பெயரை திருப்பாவை என்று மாற்றிக்கொண்டுவிட்டாயா பாவை?

திருப்பாவை: ஆமாம் கோவை. திருப்பாவை என்று மாற்றிக்கொண்டுவிட்டேன். ஆனாலும் சில விஷமிகள் என்னை மிஸ்டர் பாவை, மிஸ்டர் பாவை என்று அழைக்கிறார்கள். கேட்டால் 'திரு என்றால் ஆங்கிலத்தில் மிஸ்டர் தானே , அதனால் தான் மிஸ்டர் பாவை என்று அழைக்கிறோம்' என்று விளக்கம் சொல்கிறார்கள். இப்போது என்பாடு பெரும்பாடாக இருக்கிறது.

கோவை: நான் சொல்கிறேன் என்று தவறாக எண்ணவேண்டாம் திருப்பாவை. உன் பெயரை மீண்டும் மாற்றிப் 'பாவை' என்று வைத்துவிடு. அதன் பிறகு உன் பெயரால் உனக்கு எந்த கஷ்டமும் இருக்காது.
திருப்பாவை: நீ சொல்வது ஒருவிதத்தில் நல்ல யோசனையாகத்தான் தெரிகிறது. நிறைய செலவாகவும். இருந்தாலும் முயற்சி செய்து பார்க்கிறேன்.


பிறகு மூன்று மாதங்கள் கழித்து தோழிகள் இருவரும் மீண்டும் சந்திக்கின்றனர்:

கோவை: என்னம்மா என் அன்புத்தோழி, இப்போது நீ வெறும் பாவைதானே ?
பாவை: பார்த்தாயா , நீயும் மற்றவர்களைப்போல் என்னை அழைக்கிறாய். எவ்வளவோ செலவும் முயற்சியும் செய்து என் பெயரைக் ‘பாவை’ என்று மாற்றியபின் இப்போது பலரும் 'வெறும் பாவை' வெறும் பாவை என்றுதான் அழைக்கிறார்கள். பாவை என்று அழைப்பவர்கள் மிகவும் குறைவு.

கோவை: ஓஹோ, விஷயம் கொஞ்சம் சிக்கலாகத்தான் இருக்கிறது. நீ கோபிக்கமாட்டாய் என்றால் ஒன்று சொல்கிறேன்.

பாவை: சொல்லம்மா என் அன்புத்தோழி கோவை. நீ என் நல்லதிற்காகத்தானே எதையும் சொல்வாய், செய்வாய்.

கோவை: நாம் இருவருமே இருப்பது கோவையில்தானே, எனவே நீயும் உன் பெயரை சற்றே மாற்றி கோவைப்பாவை என்று வைத்துக்கொண்டால் பெயர் சச்சரவுகள் எதுவும் வராமல் இருக்கும் என்று தோன்றுகிறது.

பாவை: (சிறிது யோசித்துவிட்டு), இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது. உன் பெயரும் கோவை. நீ இருப்பது தென்கோவை. நான் இருப்பது வடகோவை. எனவே என் பெயரை மாற்றி 'வடகோவைப்பாவை" என்று வைத்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறன். ஆனால் ஒரு பயம். போனதடவைப் பெயர் மாற்றப் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றபோது " இனியும் நீங்கள் உங்கள் பெயரை மாற்ற இங்கு வந்தால், உங்கள் பெயரை ஊர்ப்பாவை என்று மாற்றிவிடுவோம்" என்று எச்சரித்தார்கள்.

கோவை: நீ ஊர்ப்பாவையாக இருப்பதை நான் சிறிதும் விரும்பமாட்டேன். அதைப்பார்க்கையில் வெறும்பாவை எவ்வளவோ பரவாயில்லை. நீ வெம்பிய வெறும் பாவையாகவே இருந்துவிட்டுப்போ.
பாவை: ???

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (26-Jan-23, 4:40 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 33

சிறந்த நகைச்சுவைகள்

மேலே