520 ஊனுண்போர் தமைப்புலி உண்ண ஒப்புவரோ - விலங்கினத்துக்கு இடர் செய்யாமை 7
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் அருகி வரும்)
எமக்குண விலங்கைப் புள்ளை
யிறைசெய்தா னெனக்கொன் றட்டுச்
சுமக்கரி தாக வுண்டு
பாழ்ங்குழி தூர்க்கா நின்றீர்
தமக்குண நும்மை யீசன்
சமைத்தனன் எனப்புல் சீயம்
அமர்க்கரி யாதி யும்மை
அடித்துணின் என்செய் வீரால். 7
- விலங்கினத்துக்கு இடர் செய்யாமை, நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
எங்கட்கு உணவாக உண்ண விலங்கினங்களையும், பறவைகளையும் ஆண்டவன் படைத்தான் என்று பொருந்தாவுரை புகன்று, கொன்று சமைத்து வயிறு சுமக்க முடியாதபடி விலாப்புடைக்க உண்டு பாழான வயிற்றைத் தூர்க்கின்றவர்களே!
தங்கட்கு உணவாக உண்ணும்படி உங்களைப் படைத்தான் பரமன் என்று புலி சிங்கம் காட்டுப்பன்றி முதலிய கொடு விலங்குகள் கூறி உங்களைக் கொன்று உண்ணுமானால் என்ன செய்வீர்கள்?
புல் - புலி. சீயம் - சிம்மம். அரி - காட்டுப்பன்றி.