காணம் இன்மையான் மேவா தொழிந்தாளே காற்கால்நோய் காட்டிக் கலுழ்ந்து – நாலடியார் 372

நேரிசை வெண்பா

அங்கோட் டகலல்குல் ஆயிழையாள் நம்மோடு
செங்கோடு பாய்துமே என்றாள்மன்; - செங்கோட்டின்
மேற்காணம் இன்மையான் மேவா தொழிந்தாளே
காற்கால்நோய் காட்டிக் கலுழ்ந்து 372

பொதுமகளிர், நாலடியார்

பொருளுரை:

அழகிய பக்கங்கள் உயர்ந்த அகன்ற அல்குலை உடைய ஆராய்ந்தெடுத்த இழைகளை அணிந்த விலைமகள் நாம் பொருளை உடையதாயிருந்த காலத்து நம்மோடு செங்குத்தான மலையுச்சியில் ஏறிக் கீழ் விழுந்து ஒன்றாய் உயிர் துறப்போம் என்று அன்புரை கூறினாள்;

இப்போது நமது கையிற் பொருள் இல்லாமையால் தனது காலில் வாத நோயென்று காட்டிப் போலியாக அழுது அம்மலையுச்சியின் மேல் வராமற் போனாளே! என விலைமகளினரின் இயல்பு எடுத்துரைக்கப் படுகிறது!

கருத்து:

பொதுமகளிரின் அன்பான பேச்சு போலி என்பதை உணர்ந்து அவர்களுடன் தொடர்பை ஒழிக்க வேண்டும்.

விளக்கம்:

‘அங்கோட் டகல் அல்குல் 'இயற்கை அழகினையும்', ‘ஆயிழை' செயற்கை அழகினையும் உணர்த்தி அவை கருவியாகக் காமுகரைப் பிணிக்கும் பொதுமகளிரின் இயல்பு புலப்படுத்தப்பட்டது.

மேவா தொழிந்தாளெனக் கூறப்படுதலின் மன் ஒழியிசை யன்று: கழிவுப்பொருளது. ஒழிந்தாளே என்னும் ஏகாரம் ஈண்டுஇரங்கலின் மேற்று.

இறந்த காலத்தாற்கூறினமையின் இப்போது இவன் வறிஞனாய் வாழ வழியற்று உயிர் துறக்கச் செங்கோட்டின் மேல் ஏறினானாயிற்று.

கால் காற்றாகலின், கால் நோய் வாயுநோய். பொருள் இப்போது இல்லையாயினது அவள்பறித்துக் கொண்டமையின் என்க.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Jan-23, 9:05 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 9

மேலே