விளக்கொளியும் வேசையர் நட்பும் நாடின் வேறல்ல – நாலடியார் 371

நேரிசை வெண்பா
(’கை’ க மோனை ‘ய்’ இடையின ஆசு, ‘ய’ எதுகை)

விளக்கொளியும் வேசையர் நட்பும் இரண்டும்
துளக்கற நாடின்வே றல்ல; - விளக்கொளியும்
நெய்யற்ற கண்ணே அறுமே, அவரன்பும்
கையற்ற கண்ணே அறும். 371

பொதுமகளிர், நாலடியார்

பொருளுரை:

விளக்கின் ஒளியும் விலைமகளிர் உறவும் ஆகிய இரண்டும் கலக்கமின்றி தெளிவாக ஆராய்ந்தால் அவைதம் தன்மையில் வேறு அல்ல.

விளக்கின் ஒளி விளக்கில் ஊற்றிய நெய் வற்றிய போதே அணைந்து விடும்.

அத்தகைய விலைமகளிரின் அன்பும் கொடுப்பவரின் கைப்பொருள் வற்றிய போது இல்லையென்றாகி விடும்.

கருத்து:

பொதுமகளிர் அன்பு விலைக்கே அல்லாது விலை கொடுப்பாரின் அன்பிற்கு அன்று.

விளக்கம்:

ஒளிக்குக் காரணம் நெய்யாவது போல, அவரன்புக்குக் காரணம் பொருளேயன்றி வேறல்ல என்றார்.

துளக்கற நாடுதல் - ஐயந் திரிபின்றி ஆராய்தல்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Jan-23, 8:32 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 109

மேலே