நீள்கயத்துள் யாமை நனைந்துவா என்று விடல் - பழமொழி நானூறு 263
நேரிசை வெண்பா
அகந்தூய்மை யில்லாரை ஆற்றப் பெருக்கி
இகந்துழி விட்டிருப்பின் அஃதால் - இகந்து
நினைந்து தெரியானாய் நீள்கயத்துள் யாமை
நனைந்துவா என்று விடல். 263
- பழமொழி நானூறு
பொருளுரை:
மனத்தூய்மை இல்லாதவர்களை மிகவும் நம்பி சேய்த்தாய இடத்தே தங்காரியம் முடிக்கும் பொருட்டு அவரைச் செல்லவிட்டு இருப்பின்,
அச்செயல் மனதில் ஆராய்ந்து அறியானாய் ஆமையைப் பிடித்த ஒருவன் அந்த ஆமையை நீண்ட குளத்திற்குப் போய் நீரால் நனையப் பெற்றுத் திரும்பிவா என்று சொல்லி விடுதலை ஒக்கும்.
கருத்து:
மனத்தூய்மை யில்லாதாரைச் சேய இடத்துள்ள கருமத்தை முடிக்க அனுப்புதல் கூடாது.
விளக்கம்:
ஆமையைக் குளத்திற் கனுப்பின் திரும்ப வராதது போல, மனத்தூய்மை யில்லாரும் காரியம் முடித்துத் திரும்புதல் இலர்.
'நீள்கயத்துள் யாமை நனைந்துவா என்று விடல்' என்பது பழமொழி.
சிறந்த கட்டுரைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
