கடையாயார் தம்மேல் பெரும்பழி யேறுவ பேணார் - பழமொழி நானூறு 262

நேரிசை வெண்பா

கருந்தொழில ராய கடையாயார் தம்மேல்
பெரும்பழி யேறுவ பேணார் - இரும்புன்னை
புன்புலால் தீர்க்கும் துறைவ!மற் றஞ்சாதே
தின்ப(து) அழுவதன் கண். 262

- பழமொழி நானூறு

பொருளுரை:

பெரிய புன்னையது பூக்கள் புல்லிய புலால் நாற்றத்தைப் போக்கும் கடற்றுறையை உடையவனே! உண்ண விரும்புவது உண்ணப்படும் பொருளின் துன்பத்தைக் கண்டு அஞ்சுவதில்லை; அதுபோல, கொடிய தொழில்களைப் புரிவோராகிய கீழ்மக்கள் தம்மீது மிக்க பழிசேறலைப் பொருட்படுத்தார்.

கருத்து:

கீழ்மக்கள் பழிக்கு அஞ்சார்.

விளக்கம்:

புகழிற்கு வெண்மை நிறம் கூறுதல் போலத் தீமைக்கு இங்கே கருமை நிறம் கூறப்பட்டது. தீமையைத் தருந்தொழில் என்பது பொருள். அறத்திற்கும் வெண்மை நிறமே கூறுதல் மரபு.

'அஞ்சாதே தின்பது அழுவதன்கண்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Jan-23, 8:19 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 13

மேலே