நாற்பதியைந்து ஆண்டுகளுக்குப்பிறகு

சமீபத்தில் எனது பெரியம்மாவின் பெண் ஒருவர் என்னிடம் தொலைபேசியில் உரையாடினார். இதில் என்ன பெரிய விஷயம் இருக்கமுடியும் என்று நீங்கள் நினைப்பதை நான் அறிவேன். என் பெரியம்மா பெண் லதா என்னுடன் நாற்பத்தைந்து வருடங்கள் கழித்துப்பேசினாள். இதுதான் விசேஷம். நான் சிறுவயதில் எங்களுடைய சொந்தவீட்டில் வசித்துவந்தபோது என் வயது சுமார் பதினேழு. அந்த நேரத்தில்தான் நான் லதாவை எங்கள் வீட்டில் வந்து தங்கியிருந்தபோது பார்த்தது. அதன் பிறகு நாற்பதியைந்து வருடங்கள் நாங்கள் ஒருவரை ஒருவர் பார்க்கவும் இல்லை, பேசவும் இல்லை.

லதா வந்த நேரத்தில் என்னுடைய இன்னொரு பெரியம்மா பெண் உஷாவும் அந்த நேரத்தில் என் வீட்டிற்கு வந்திருந்தாள். அவளையும் ஏறக்குறைய நாற்பது வருடங்களுக்குப்பிறகுதான் சென்னையில் எங்களது உறவினர் திருமணத்தின்போது மீண்டும் சந்தித்தேன்.

லதா என்னுடைய அலைபேசி எண்ணை என் அண்ணனிடமிருந்து பெற்றுக்கொண்டாள். உடனடியாக என்னுடன் அலைபேசியில் தொடர்பு கொண்டு " நாற்பதியைந்து வருடங்கள் கழித்து உன்னுடன் பேசுவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். உன் அம்மா , என் சித்தி, எனக்கு அந்நாளில் ஒரு தோழி போல. அவ்வளவு மனம்விட்டு உன் அம்மாவுடன் பேசுவேன்." என்று கூறிவிட்டு, கொஞ்சமும் மாறாத அதே பழைய தொனியில் என்னுடன் சிறிதுநேரம் பேசினாள். நானும் அவளிடம் "லதா நான் உன்னை உண்மையில் இனி என் வாழ்க்கையிலேயே சந்திக்கமாட்டேன் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். இப்போது நீ என்னுடன் பல ஆண்டுகள் கழித்துப்பேசினாய். உன்னுடைய ஏனைய சகோதர சகோதரிகளுடன் எனக்கு அவ்வளவு தொடர்பு இல்லை. ஐந்து பத்து வருடங்களுக்கு ஒருமுறை ஏதாவது திருமணத்தில் சந்திப்போம். அவ்வளவே". நான் லதாவிடம் " அந்நாட்களில் நீ எங்க வீட்டிற்கு வந்தபோது வேப்பம்பழத்தை ஒரு தென்னங்குச்சியில் சொருகி, அந்த குச்சியை வளைத்து அதிலுள்ள வேப்பம்பழத்தை இன்னொருவர் மீது படுமாறு அடித்து விளையாடுவோம் , நினைவு இருக்கிறதா" என்றபோது லதா " அதை எப்படி நான் மறக்கமுடியும். நன்றாகவே ஞாபகம் இருக்கிறது. என்னசெய்வது, காலத்தின் கோலம், நான் உங்கள் யாரிடமும் தொடர்புகொள்ளாமல் இவ்வளவு வருடங்கள் இருந்துவிட்டேன். இப்போது இவ்வளவு ஆண்டுகளுக்குப்பிறகு உங்களையெல்லாம் பார்க்கப்போகிறேன் என்பது எனக்கு வாழ்க்கையில் மீண்டும் கிடைக்கிற பெரிய பரிசாக நினைக்கிறன்" என்றாள்.

லதா என்னையும் என் மனைவியையும் அவளது புதுமனைப் புகுவிழாவுக்கு அழைக்கவே என்னுடன் தொடர்புகொண்டு பேசுவதாக கூறினாள். அவளும் மும்பையிலிருந்து நான் வசித்து வரும் கோவை நகருக்குக் குடிபெயர்ந்து விட்டதாய்த் தெரிவித்தாள். நானும் என் மனைவியும் அவர்களது புதுமனைபுகுவிழாவுக்குச் சென்று வந்தோம். லதாவின் கணவரை நான் முதன்முதலில் அங்குதான் சந்தித்தேன். அவர்களது திருமணத்திற்கும் நான் செல்லலவில்லை.

இன்னொரு பெரியம்மா பெண் உஷா தற்போது சிங்கப்பூரில் வசித்து வருகிறாள். அவளுடைய கணவனை ஒரே ஒருமுறை நான் நாற்பது வருடங்களுக்கு முன்பு பார்த்திருக்கிறேன். பதினைந்து வருடங்களுக்கு முன்பு அவள் கணவர் வெளிநாடு சென்றிருந்தபோது மாரடைப்பால் காலமாகிவிட்டார். அந்த நேரத்தில் உஷாவுக்கு இரண்டு சின்னப் பிள்ளைகள். பாவம், பல இன்னல்கள் பட்டு, பெரும்பாடுபட்டு அவர்களை வளர்த்து, இப்போது இருவரும் உத்தியோகம் செய்து வருகிறார்கள். வெளிநாட்டில் தனியாக ஒரு இந்தியப்பெண் இரண்டு சிறுபிள்ளைகளுடன் வாழ்வது எவ்வளவு கடினமான காரியம் என்பதை நம்மால் யூகிக்கமுடியும். உஷாவிடம் உள்ள இன்னொரு சிறப்பான குணம் என்னவெனில் தன்மானம் , சுயகவுரவம். எவ்வளவோ பொருளாதார பிரச்சினைகள் உடல் உபாதைகள் வந்தாலும் எவரிடமும் பண உதவியோ, தேக அளவில் உதவியோ கேட்கவே மாட்டாள்.

இக்கட்டுரையின் மூலம் நான் தெரியப்படுத்துவது என்னவென்றால் நேரத்தின் அருமையை, அதன் மகத்துவத்தை. யாரை எப்போது எங்கே சந்திப்போம், எவ்வளவு நாட்கள் அவர்களுடன் தொடர்பு கொள்வோம் , இந்நேரத்தில் பிரிவோம் என்பதை நாம் எவருமே அறியமாட்டோம்.
மேற்கூறியதுபோல நேரம் அமைந்துவிட்டால் நாற்பத்தைந்து வருடம் என்ன அறுபத்தைந்து வருடம் கழித்துக்கூட நாம் விரும்பியவரையோ அல்லது நமக்குப்பிடிக்காதவரையோ சந்திப்போம். அதே நேரம், மிகவும் நெருங்கிப்பழகும் தோழமையும் ஓரிரு சந்தர்பங்கள் வாயிலாக பிரிந்துவிடும் என்பதையும் நாம் அறிவோம். நான் பலமுறை இந்த அனுபவம் கொண்டிருக்கிறேன். ஆயினும் நான் நண்பர்களை இழக்க மிகவும் முக்கிய காரணம் நான் மிகவும் உணர் திறம் உடையவன், உணர்ச்சி வயப்படுபவன். இந்த எனது குணம் மற்றும் தன்மைகளை நான் மாற்றிக்கொள்ள எவ்வளவோ முயற்சிகள் செய்துவிட்டேன். மிகவும் குறைந்த அளவில் மாற்றங்கள் கண்டேன் தவிர , இந்தத் தன்மைகள் என்னில் இறுதிவரை இருக்கும் என்பதுதான் என் உறுதியான கணிப்பு.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (26-Jan-23, 7:29 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 25

மேலே