608 முன்பின் பிறந்தார் தந்தைதாய் மக்களாமுன் - உடன் பிறந்தார் இயல்பு 1
கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
முன்னவன் சிறுபிதா முன்னை யன்னையாம்
பின்னவ னேயனாம் பின்னை புத்திரி
பன்னருஞ் சோதரர் பன்னி மார்களீங்
குன்னருஞ் சோதரம் போலு முள்ளமே. 1
- உடன் பிறந்தார் இயல்பு, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
மனமே! நம் முன்பிறந்தோனாகிய தமையன் சிறிய தந்தையாவன். தமக்கை சிறிய தாயாவள்.
பின்பிறந்தோனாகிய தம்பி மகனாவன். தங்கை மகளாவள்.
சொல்லுதற்கரிய உடன்பிறந்தாரின் மனைவிமார் உடன்பிறந்தாரே யொக்கும்.
இங்ஙனம் கொண்டு ஒழுகுவதே வீடும் நாடும் மேன்மையுற்று விளங்கி நலம் பல பயக்கும் நன்னெறியாகும்.
முன்னவன் - தமையன். பின்னவன் - தம்பி. நேயன் - காதலன்; மகன். பின்னை - தங்கை. புத்திரி - மகள். பன்னல் -சொல்லுதல். சோதரர் - உடன்பிறந்தார். பன்னிமார் - மனைவிமார்.