கானமும் கருத்தும்
இறைவன் இருக்கின்றனா...??
என்று மனிதன் கேட்கும் கேள்விக்கு பதில் கேள்வியாக...
மனிதன் இருக்கின்றனா...??
என்று இறைவன் கேட்பது போல்
கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகளை குறித்து உங்களோடு பேசுகிறேன்.
காலத்தை வென்ற கவிஞன் படைத்த அற்புதமான பாடல்
அவன் பித்தனா...? என்ற படம்
S. S. ராஜேந்திரன், விஜயகுமாரி இருவரின் நடிப்பும் பாடலின் பின்னணியும் மிகவும் சிறப்பு.
இந்த படம் 1966 ல் வெளிவந்தது.
T. M. S, சுசீலா அவர்களின் குரலில்
கருத்துள்ள இனிமையான பாடல்.
இறைவன் இருக்கின்றனா...?
என்ற கேள்வியில் மனிதர்களின் யதார்த்தம் நிறைந்த மனதின் வலியை உணரமுடிகிறது...
அவன் இருந்தால் உலகத்தில் எங்கே வாழ்கிறான்....?? மனிதர்களுக்கு இவ்வளவு துன்பத்தைக் கொடுத்துவிட்டு இறைவன் எங்கு சென்று விட்டான்
அடுத்த சில வரிகளில்
நான் ஆத்திகனானேன் அவன் அகப்படவில்லை....
நான் நாத்திகனானேன் அவன் பயப்படவில்லை... என்று
கவிஞர் ஆத்திகத்தையும், நாத்திகத்தையும் மென்மையாக மோதுவது போல்.. படைத்துள்ளார்.
குடிசையில் ஓர் மனது
கோபுரத்தில் ஓர் மனது
கூடாத சேர்க்கையில் பல மனது
என்று மனிதனின் மனம் ஒரே நிலையில் இருப்பதில்லை என்பதை மிகவும் தெளிவாக சொல்லி இருக்கின்றார்
உள்ளத்தின் கருத்துக்களை நேர்மையாக சொல்பவனை
இந்த உலகம் மதிப்பதில்லை.
அவனை பித்தன் என்றுதான் சொல்லுகின்றார்கள்
மேலும், வெண்மையை கருமையென்று கண்ணாடியும் காட்டுகிறதே என்று வருத்தம் கொள்ள வைக்கிறார் கவிஞர்
சந்தேகம் பிறந்துவிட்டால் சத்தியமும் ஜெயிப்பதில்லை
சத்தியத்தை காப்பவனும் சாட்சி சொல்ல வருவதில்லை.. என்று
வரிகளை படைத்துவிட்டு, இறுதியாக
மனிதனை மறந்துவிட்டு
வாழ்பவன் இறைவனில்லை
என்று முற்றுப்புள்ளி வைக்கிறார் கவிஞர்.
--கோவை சுபா