மலங்கன்ன செய்கை மகளிர்தோள் சேர்வார் விலங்கன்ன வெள்ளறிவி னார் – நாலடியார் 375

நேரிசை வெண்பா
(’ம்’ ‘ங்’ மெல்லின எதுகை)

பாம்பிற் கொருதலை காட்டி ஒருதலை
தேம்படு தெண்கயத்து மீன்காட்டும் - ஆங்கு
மலங்கன்ன செய்கை மகளிர்தோள் சேர்வார்
விலங்கன்ன வெள்ளறிவி னார்! 375

- பொதுமகளிர், நாலடியார்

பொருளுரை:

இன்சுவை மிக்க தெளிந்த நீர்ப்பொய்கையில் பாம்புக்குத் தனதுடலின் ஒரு புறமாகிய தலையைக் காட்டி மற்றொரு புறமாகிய வாலை மீனுக்குக் காட்டி அவ்வவற்றிற்கு இனமாயிருந்து உயிர் பிழைத்து வரும் விலாங்கு மீனைப் போன்ற கள்ளச் செயலுடைய விலைமகளிரின் தோள்களைக் கூடுங் காமுகர், விலங்கைப் போல் பகுத்தறிவில்லாத அறியாமையுடையவர் ஆவர்.

கருத்து:

விலைமகளிர் கள்ளவுருவினர் ஆகலின் அவரைக் கூடற்க வென்பது.

விளக்கம்:

விலாங்கு மீனின் தலைப்புறம் பாம்பு போலவும் வாற்புறம் மீன் போலவும் இருக்குமாகலின், பாம்பு மீனென்று கருதி இரைபிடிக்க வருமாயின் அதற்குத் தலைப்புறங் காட்டி இனம்போல உலவி உயிர் தப்பியும்,

தனக்கு உணவாகிய சிறு மீன்கள் பாம்பென்று கருதி அஞ்சி விலகுமாயின் அவற்றிற்கு வாற்புறங் காட்டி இரையுண்டு உயிர் பிழைத்தும் அது வஞ்சித்து வாழ்தலின்,

பொருளற்றாரையும் பொருளுற்றாரையும் பகையாதும், நேசித்தும் அவரவர்க்கேற்ப ஒழுகிப் பரிந்தும், பொருள் பறித்தும் வஞ்சித்து உயிர் வாழும் விலை மகளிர்க்கு அஃது உவமமாயிற்று.

கரந்து பொருள் பறித்து வாழும் இம் மகளிரியல்பு, கள்ளத்தைப் பகுத்தறிதலாகிய உள்ளீடில்லாமையின், ‘வெள்ளறிவினார்' என்றார்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Feb-23, 8:18 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

மேலே