உள்ளம் ஒருவன் உழையதா ஒண்ணுதலார் கள்ளத்தாற் செய்யுங் கருத்து – நாலடியார் 380
நேரிசை வெண்பா
உள்ளம் ஒருவன் உழையதா ஒண்ணுதலார்
கள்ளத்தாற் செய்யுங் கருத்தெல்லாந் - தெள்ளி
அறிந்த விடத்தும் அறியாராம் பாவம்
செறிந்த உடம்பி னவர்! 380
- பொதுமகளிர், நாலடியார்
பொருளுரை:
தமது நெஞ்சம் வேறொருவனிடத்ததாக ஒளிபொருந்திய நெற்றியையுடைய பொருட்பெண்டிர் வஞ்சனையால் தம்மிடஞ் செய்யும் நினைவெல்லாம் ஆராய்ந்து நன்றாகத் தெரிந்த நிலையினும்,
தீவினை மிக்க பிறப்பினையுடையவர் அத்தெரிவினைத் தமதொழுக்கத்திற் கொண்டுவரும் அறிவாற்றல் இல்லாதவராவர்.
கருத்து:
தீவினை மிக்கார் விலைமாதரின் வஞ்சங்களை நன்கு தெரிந்திருந்தும், அவரிடமிருந்து நீங்கி யொழுகும் ஆற்றல் இல்லாதவராவர்.
விளக்கம்:
உள்ளம் ஒருவனுழையதா என்றமையான் உடம்பு பிறனொருவந் உழையதாக் கள்ளஞ் செய்வரென்பது பெறப்பட்டது.
அறிதற்கிருந்த அறிவாற்றல், தீவினைச் செறிவால் அறிந்தவாறு ஒழுகுதற்கு இல்லாமையின், ‘அறிந்தவிடத்தும் அறியாராம்' என்றார். ஆம், ஆவரென்னும் பொருட்டு.
‘அறிவதறிந்தும் பழியோடு பட்டவை செய்தல் செய்த வினையான் வருமாகலின்1 ‘பாவஞ் செறிந்த உடம்பினவர்' என்றார். இதனான் வஞ்சமிக்க விலைமாதரினின்று காமுகர் நீங்காமைக்கு ஏதுக் கூறுமுகத்தால் அவ்விரு திறத்தாரது இழிவும் உரைக்கப்பட்டது.