ஒண்ணுதலார் யார்க்குந் தமரல்லர் தம்உடம்பி னார் - நாலடியார் 379
நேரிசை வெண்பா
ஊறுசெய் நெஞ்சந்தம் உள்ளடக்கி ஒண்ணுதலார்
தேற மொழிந்த மொழிகேட்டுத் - தேறி
எமரென்று கொள்வாருங் கொள்பவே, யார்க்குந்
தமரல்லர் தம்உடம்பி னார் 379
பொதுமகளிர், நாலடியார்
பொருளுரை:
பிறர்பாற் பொருள் பறித்துக் கொள்ளுதலாகிய தீமையைச் செய்யுந் தமது நினைவைப் புறத்தே புலப்படாதபடி தம் உள்ளத்தில் அடக்கிக் கொண்டு ஒளிமிக்க நெற்றியையுடைய பொருட் பெண்டிர் புறத்தே மனந் தெளியும்படி மொழிந்த பசப்பு மொழிகளைக் கேட்டு,
அவற்றை நம்பி அப்பெண்டிர் எமக்குரியரென்று உரிமை கொள்வாருங் கொள்வர்; அம் மாதரார் எவர்க்கும் உறவினராகார்; அவர் தமக்கே உரிய உடம்பினை உடையர்.
கருத்து:
வேசையர் தமதுடம்பைத் தமதாக்கத்துக்குப் பயன்படுத்துவரான்றிப் பிறரெவர்க்கும் உரிமையாக்கார்.
விளக்கம்:
‘தூண்டில் இரையின் துடக்குள் ளுறுத்துத் தேன் தோய்த்தன்ன தீஞ்சொல் அளைஇ"1 உரையாடும் இயல்பினராதலின், ‘ஊறுசெய் நெஞ்சம் தம்உள்ளடக்கித் தேற மொழிந்த மொழி' என்றார்.
‘கொள்வாருங்கொள்ப' வென்றார், தமக்குடம்பாடின்மையின்.
அன்புடையராயின் பிறர்க்கென்பும் உரியராவராகலின் அன்பிலாரான இவர் தம் உடம்பு தமக்கே உரியவராயினார். இவைஐந்து பாட்டானும் விலைமாதரது கரவுடைமை பெறப்பட்டது.