அறிவினால் மாட்சியொன் றில்லா ஒருவன் பிறிதினால் மாண்ட தெவனாம் - பழமொழி நானூறு 271
நேரிசை வெண்பா
அறிவினால் மாட்சியொன்(று) இல்லா ஒருவன்
பிறிதினால் மாண்ட(து) எவனாம் - பொறியின்
மணிபொன்னும் சாந்தமும் மாலையும் இன்ன
அணியெல்லாம் ஆடையின் பின். 271
பழமொழி நானூறு
பொருளுரை:
சாணையாற் கழுவுதலையுடைய இரத்தினாபரணமும் பொன்னாபரணமும், கலவையும் பூமாலையும் இவைபோன்ற பிற அணிகள் யாவும்,
அழகுறச் செய்வதில் உடையின் பின்னே வைத்து எண்ணத்தக்கனவாம்.
ஆதலால், அறிவினாலாகிய பெருமை ஒருசிறிதும் பெறாத ஒருவன் செல்வத்தைப் பெற்றதனால் மாட்சிமையடைதல் அவனுக்கு என்ன பெருமையைக் கொடுக்கும்?
கருத்து:
செல்வம் உடையோரினும் அறிவுடையாரே சிறந்தோர் ஆவர்.
விளக்கம்:
ஆடையில்லானை அணிகள் அழகுறச் செய்யாமை போல, அறிவில்லானைச் செல்வம் பெருமையுறச் செய்யாது என்பதாம்.
பொறித்தல் – பொலிவு பெறச் செய்தல்; கலன்களைப் பொலிவு பெறச் செய்தலின் பொறி என்பது சாணை என்னும் பொருளதாயிற்று.
செல்வம் இரண்டனுள் கல்விச் செல்வம் பிரிக்கப்பட்டமையின், பிறிது என்பது செல்வம் என்னும் பொருளதாயிற்று.
'மணிபொன்னும் சாந்தமும் மாலையும் இன்ன அணியெல்லாம் ஆடையின் பின்.' இஃது இச்செய்யுளில் வந்த பழமொழி.