வணக்கம்
#வணக்கம்
🙏🙏🙏🙏
சிலர் கரமிணைத்தலிலும்
பலர் புன்னகைக்கும் இதழ்களிலும்
சிலர் தலையசைப்பினிலும்
ஏறி அமர்ந்து கொண்டு
மௌனமாய் உதிர்க்கப்பெருகையில்
மரியாதை நிமித்தற்குரியது
வணக்கம்..!
உதிர்த்த மாத்திரத்தில்
உலுக்கியும் கொள்கிறது
பாரிஜாத மலர்களை
உலுக்கிக்கொள்வது போல்..!
வணக்கமும் வாசத்திற்குரியதுதான்
பாசத்தை பூசிய பண்பினில்…!
விடியலில்
பூபாளம் இசைக்கும் வணக்கங்கள்
அதிகாலையை வரவேற்கும்
பட்சிகளின் இராகமாய்
செவிக்குள் பாய்ந்து
இதயத்தில் ஆலாபனைகள்…!
மதிய வணக்கம்
கொஞ்சம் மாறுபட்டது..
உச்சி வெயில்
தலையின் மீது விழுகையில்
மறந்தும் மங்கியும் விடுகிறது
மனிதனும் ஆறறிவிலிருந்து
சற்று விலகியதாய் காண்கையில்
வணக்கப் பரிமாற்றங்கள்
வலுவற்றதாய்ப் போகிறது..!
உஷ்ணத்தை ஓங்கி அறைந்து விட்டு
நிலவு தழுவும் குளிர்க்காற்றில்
குதூகலமாய் செலுத்தும் வணக்கம்
பனித்துகள்களை அள்ளி
முகத்தில் வீசியதான சிலிர்ப்பினில்
அன்றைய பொழுதின்
இறுதி கட்டத்தை உணர்த்தி
நிறைய பேர்களுக்கு மகிழ்ச்சியள்ளி
வழங்காமல் போனதில்லை
இரவு வணக்கங்கள்..!
இப்படியாக,
முக்காலத்தை உணர்த்தும்
முத்தான பண்பான வணக்கத்திற்கு
என் இணக்கமான வணக்கங்கள்..!
#சொ. சாந்தி🙏🙏