உறவுகள் பலப்படட்டும்

உறவுகள் பலப்படட்டும்
இன்றைய அவசர உலகத்தில் நட்பு, பாசம் இவைகளுக்கு இடமில்லாமல் போய் கொண்டிருக்கின்றன. ஏராளமான வாய்ப்புக்கள் இந்த நூற்றாண்டில் உருவாகியுள்ளன. ஆனால் போன நூற்றாண்டில் இருந்த அந்த அந்நியோன்யம் இன்று உறவினர்களிடையேயும் நண்பர்களிடையேயும் உள்ளனவா? என்பது கேள்விக்குறியே.
நாம் இப்பொழுதெல்லாம் தற்காலிக உறவுகளையே நம்பிக்கொண்டிருக்கிறோம். அதாவது அவனால் நமக்கு காரியம் ஆகிறதா? உடனே அவனிடம் உறவு கொள்ள தயாராகி விடுகிறோம். அவனால் நமக்கு காரியம் ஆகாது என்று தெரிந்து விட்டால் அவனை அல்லது அவளை, இல்லயென்றால் அவர்களை கழற்றி விட தயாராகி விடுகிறோம். இது நட்பு வட்டாரத்தில் பெரிய விரிசலை உண்டு பண்ணாவிட்டாலும் உறவுகளிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.
நம்முடைய வெளி வட்டார தொடர்பு என்பது நாம் பணி புரியும் இடத்தை சார்ந்தோ அல்லது நாம் வசிக்கும் இடத்தை சார்ந்தோ மட்டுமே காணப்படுகிறது. இது ஓரளவு விரிவுபடுத்தப்பட்டால் நமது நட்பு, அல்லது உறவுகளின் எல்லை விரிவு படும். உதாரணமாக நாம் தொடர்ந்து பார்க்கும் ஒருவரை ஒரு புன்சிரிப்பு, அல்லது வணக்கம், என்று சொல்லுதல், இவைகள் அவர்களிடம் நமக்கு ஒரு நட்பு வட்டாரத்தை ஏற்படுத்தும். ஒருவர் ஒரு இடத்தில் எத்தனை வருடங்கள் வசித்தாலும், அவரை பற்றி விசாரிக்க போகும்போது அவரை பற்றி ஒருவருக்குமே தெரிந்திருக்கவில்லை என்றால் அதனால் அவருக்கு என்ன பயன்? அவர் வாழும் வாழ்க்கைக்கு என்ன பயன்? நமது நெருங்கிய அல்லது தூரத்து உறவுகளை அவ்வப்பொழுது விசாரிப்புகள் மூலம் தொடர்புடன் இருந்தால் அது அவர்களுக்கும் நம் மீது பாச உணர்வுகளை நெடுங்காலம் வைத்திருக்க உதவும்.
பொதுவாக மனித இயல்புகளில் ஒன்று, குற்றம் கண்டு பிடித்தல், இந்த ஒரு காரணத்தாலேயே பல நட்புகளில் விரிசல் ஊண்டாகி விடுகிறது. அதை பொருட்
படுத்தாவர்களுக்கு நட்பு பலப்படும். காரணம் அவருக்கு இவரால் குற்றம் செய்யப்பட்டிருப்பின் அவர் அதை கண்டு கொள்ளாமல் இருப்பதால் சம்பந்தபட்டவரே மன்னிப்பு கோருவார். அல்லது இங்கனம் தவறுகள் நடக்காமல் இருக்க முயற்சிப்பார்.
நமது கால சூழ்நிலைகளும், வாழ்க்கை முறைகளுமே கூட நம்மால் நட்பை தொடர்ந்து வைத்து கொள்ள முடியாது என்பது உண்மையே. ஒருவருக்கு வாழ்வதற்கான வாய்ப்புக்கள் வெளியூரிலிருந்தோ அல்லது வெளிநாடுகளுக்கோ வந்து சேரும். அத்தகைய சூழ்நிலையில் நட்பு வட்டாரமோ அல்லது உறவுகளின் தொடர்போ தொடர்ந்து வரும் என்று நிச்சயித்து கூற முடியாது, இருந்தாலும் போகுமிடங்களில் அவர் தன் குண நலன்கள் மூலம் நல்ல நட்பு வட்டாரத்தை உருவாக்கி கொள்வதால் மனித உறவுகளை ஏற்படுத்தி கொள்ளலாம்.
அடுத்ததாக நம் நாட்டு மனித இயல்புகளில் ஒன்றான சாதிகள் மூலமாகவோ அல்லது மதங்கள் மூலமாகவோ அடுத்தவர்களிடம் நட்பு கொள்வதில் தடுமாற்றம் கொள்கிறோம். நல்ல அம்சம் என்னவென்றால் நம் நாட்டு மக்கள் மேலே சொன்ன இரு அம்சங்களையும் மீறி நட்புக்கு மரியாதை கொடுப்பவர்கள் அதிகம் இதற்காக நாமே நம்மை பாராட்டிக்கொண்டே ஆக வேண்டும்.
ஆண் பெண் நட்பென்பது இன்றைய கால கட்டங்களில் ஏற்றுக்கொண்ட ஒன்று. போன நூற்றாண்டில் என்னதான் பாசம், உறவுகள் பலமாக இருந்தாலும் பெண் நட்பை அந்தளவுக்கு ஏற்றுக்கோள்ளவில்லை என்பது உண்மை. அதற்கு நாம் அவர்களை குற்றம் சொல்லல் ஆகாது. காரணம் பெண் இந்தளவுக்கு கற்பதிலும், வேலை வாய்ப்புக்களை பெறுவதிலும் அந்த நூற்றாண்டில் வாய்ப்புக்கள் கிடைக்க பெறவில்லை என்பதுதான் உண்மை.
அப்படி இந்த நூற்றாண்டில் ஆண் பெண் நட்பு அதிக அளவு இருந்தாலும் ஐம்பது சதவிகிதம் போலித்தனமும் அல்லது காரியம் ஆவதற்குமே இருக்கிறது. இத்தகைய காரியங்களையும் மீறி நாம் நமது உறவுகளை பலப்படுத்திக்கொள்ள நாம் அவரிடமிருந்து பலனை எதிர்பார்க்க கூடாது. மிகவும் அதிகமான நெருக்கத்தையும் ஏற்படுத்த கூடாது. நம்மால் முயன்ற அளவில் அவருக்கு உதவ முயற்சிப்பதின் மூலம் (அவர் நமக்கு உதவினாரா என கேள்வி எழுப்பாமல்) நட்பை பலப்படுத்தலாம்.
அதே போல் உறவுகளிடையே அடிக்கடி உறவுக்குள் ஏற்படும் விசேஷங்களுக்கு செல்லுதல், இன்பம், துன்பம் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுதல் நம் வீட்டிலேயே சிறு சிறு விழாக்கள் வைத்து உறவினர்களையும், நண்பர்களையும் கலந்து கொள்ள செய்தல் (செலவுகள் ஏற்படும்) நாம் ஒரு திரைப்படத்திற்கோ அல்லது சுற்றுலா செல்வதற்கோ ஆகும் செலவுகளை ஏற்றுக்கொள்கிறோமல்லவா, அதைப்போல இதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நாம் இத்தைகைய செயல்கள் மூலமே நமது உறவுகளை பலப்படுத்திக்கொள்ள முடியும். அதனால் நம்முடைய சந்ததிகளுக்கு நம் செயல்பாடுகள் மூலம் இயற்கையிலேயே உறவினர்களிடையேயும், நண்பர்களிடையேயும், ஒர் நல்லுறவை ஏற்படுத்தி கொடுக்கிறோம்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (10-Feb-23, 2:40 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 52

சிறந்த கட்டுரைகள்

மேலே