பள்ளிப்பால் வாழார் பதிமகிழ்ந்து வாழ்வாரே முள்ளித்தேன் உண்ணு மவர் - பழமொழி நானூறு 274
இன்னிசை வெண்பா
செல்வத் துணையுந்தம் வாழ்நாட் டுணையுந்தாம்
தெள்ளி உணரார் சிறிதினால் செம்மாந்து
பள்ளிப்பால் வாழார் பதிமகிழ்ந்து வாழ்வாரே
முள்ளித்தேன் உண்ணு மவர். 274
- பழமொழி நானூறு
பொருளுரை:
செல்வத்தின் அளவினையும், தம் வாழ்நாளின் அளவினையும் தாம் தெளிய ஆராய்ந்து அறியாராகி சிறிய இல்லற இன்பத்தினாலே தருக்குற்று அருந்தவர்கள் உறையும் பள்ளியினிடத்து வாழாராகி இல்லின்கணிருந்து இன்புற்று வாழுகின்றவர்களே, சிறந்த தேனை உண்ணாது முள்ளிச்செடியின் தேனை உண்ணுகின்றவர்களோடு ஒப்பர்.
கருத்து:
துறவறம் சேர்தலின்றி இல்லறத்திலேயே இருந்து மகிழ்ந்து இருப்பது முள்ளித்தேன் உண்பதை யொக்கும்.
விளக்கம்:
தெளிய அறிதலாவது அவற்றின் நிலையாமையை. ஆசிரியர், சைனராதலின், 'பள்ளி' என்றார். 'முள்ளித்தேன்' என்றமையால், துறவறத்தில் மிகுந்த இன்பம் உண்மை யறியப்படும்.
'முள்ளித்தேன் உண்ணுமவர்' என்பது பழமொழி.