நன்கொன் றறிபவர் நாழி கொடுப்பவர்க் கென்றும் உறுதியே சூழ்க - பழமொழி நானூறு 275

இன்னிசை வெண்பா

நன்கொன் றறிபவர் நாழி கொடுப்பவர்க்
கென்றும் உறுதியே சூழ்க எறிதிரை
சென்றுலாம் சேர்ப்ப! அதுபோல நீர்போயும்
ஒன்றிரண்டாம் வாணிக மில். 275

- பழமொழி நானூறு

பொருளுரை:

வீசுகின்ற அலைகள் மிக்குச் சென்று கரைமேல் உலாவுகின்ற கடல் நாடனே!

நன்றாக ஒரு பொருளின் கூறுபாட்டை அறிகின்றவர்கள் நாழி அரிசியேயாயினும் அதனைக் கொடுக்கின்றவர்களுக்கு எக்காலத்தும் அவர்க்கு உறுதி தரத்தக்கனவற்றையே நினைக்கக் கடவாராக,

கடல் கடந்து சென்று ஒன்று கொண்டு இரண்டாகப் பெருக்கும் வாணிகமும் அதைப்போல ஆவதில்லை.

கருத்து:

நீ, நன்மை செய்தார்க்கு எக்காலத்தும் நன்மை செய்யும் விருப்புடையவனாக இரு. அதனால் மிகுந்த நன்மை உண்டாம்.

விளக்கம்:

மற்றொருகால் தாம் வேண்டிய வழி, அவர் கொடுக்க மறுத்த இடத்தும் என்பார், 'என்றும்' என்றார்.

போயும் என்றதிலுள்ள உம்மையைப் பிரித்து வாணிகம் என்பதனோடு கூட்டுக. கடல் கடந்து சென்று செய்யும் வாணிகமும் ஒன்று இரண்டாதலே யன்றி, நன்றியறிவுடையார் வேண்டிய பொழுதே வேண்டியன பெறுதல் போலப் பெறக்கூடாமையின், 'அதுபோல இல்' என்றார்.

நன்மை செய்தார்க்கு நன்மையை நினைத்தொழுகின், அளவற்ற நன்மையை அடைய இயலும்.

'நீர் போயும் ஒன்றிரண்டாம் வாணிக மில்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Feb-23, 5:03 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 10

மேலே