வாழும்ஊர் தற்புகழு மாண்கற்பின் இல்லாள் அமர்ந்ததே இல் – நாலடியார் 383
நேரிசை வெண்பா
நாலாறும் ஆறாய் நனிசிறிதாய் எப்புறனும்
மேலாறு மேலுறை சோரினும் - மேலாய
வல்லாளாய் வாழும்ஊர் தற்புகழு மாண்கற்பின்
இல்லாள் அமர்ந்ததே இல் 383
- கற்புடை மகளிர், நாலடியார்
பொருளுரை:
வீடு நாலாபக்கமும் இடிந்து வழியுடையதாய் மிகவுஞ் சிறியதாய் எந்தப் பக்கமும் கூரை பெயர்ந்து மேல்வழியாய்த் தன் மேல் மழை ஒழுகுவதாய் வறிய நிலையிலிருப்பினும்,
உயர்ந்த இல்லற ஒழுக்கங்களில் திறமையுடையவளாயதனால் தான் வாழும் ஊரவர் தன்னைப் புகழ்ந்து ஏத்துகின்ற மாட்சிமையான கற்பு நிலையுடைய மனைவி அமர்ந்திருக்கும் வீடே வீடெனப்படும்.
கருத்து:
செல்வம் முதலியவற்றை விட இல்லக் கிழத்தியின் நற்குணமே இல்வாழ்க்கைக்கு முதன்மையானது.
விளக்கம்:
வறிய நிலையிலும் இன்சொல் முதலிய நலங்களுடன் மனம் அமைய விருந்தோம்புதல் செய்தலின், ‘வல்லாளாய்' என்றார். தற்புகழும் இல்லாள் என்க.
இல்லற ஒழுக்கமுடையது இல்லம் எனப்படுமல்லது ஏனைச் செல்வச் சிறப்புடையன அஃதாகாவென்பது கருத்து; இவை மூன்று பாட்டானுங் கற்புடை மகளிர்க்கு முதன்மையாவன விருந்து புறந்தரல் முதலிய இல்லறக் கடமைகளென்பது விளக்கப்பட்டது!