இடனறிந்து ஊடி இனிதின் உணரும் மடமொழி மாதராள் பெண் – நாலடியார் 384
நேரிசை வெண்பா
கட்கினியாள், காதலன் காதல் வகைபுனைவாள்,
உட்குடையாள், ஊர்நாண் இயல்பினாள், - உட்கி
இடனறிந்(து) ஊடி இனிதின் உணரும்
மடமொழி மாதராள் பெண் 384
- கற்புடை மகளிர், நாலடியார்
பொருளுரை;
பார்வைக்கு இனிய இயற்கையழகு உடையவளாய், தன் காதலன் விருப்பப்படி செயற்கைக் கோலங்கள் செய்து கொள்வாளும்,
தனது கற்பின் ஒழுக்கச் சீரினால் கண்டார் எவரும் அஞ்சும் மதிப்பு உடையவளாய், தான் வாழும் ஊரிலுள்ள மகளிர் எல்லாரும் தன்னுடைய இல்லறச் செய்கைகளின் திறமைக்கு வியந்து நாண்கொள்ளற்கு உரிய மாட்சிமையுடையாளும்,
தன் கணவனிடம் உள்மதிப்புக் கொண்டு செவ்வியறிந்து ஊடியும் அஃது இனிதாம்படி அவ்வூடல் நீங்கியும் இன்பம் விளைக்கும் மென்மையான மொழிகளையுடைய பெண்ணே இல்வாழ்க்கைக்கு உரிய வாழ்க்கைத் துணையாவள்.
கருத்து:
தோற்றமும் ஒழுக்கமும் காதலும் உடைய மாது சிறந்த வாழ்க்கைத் துணையாவாள்.
விளக்கம்:
இல்லக் கிழத்தியின் அறுவகை நலங்களை மூவிரு முகமாக இச் செய்யுள் வகுத்துச் சொல்லியது. இனியாள் புனைவாள் ஓரிரு வகையும், உடையாள் இயல்பினாள் மற்றோர் இருவகையும், ஊடுவாள் ஊடலுணர்வாள் பிறிதோர் இரு வகையுமாயின.
இறுதிப்பகுதி ஊடி உணருமென்று வந்தமையான், ஏனைப்பகுதிகளும் அவ்வாறே எச்சமும் முடிவுமாய் உரைக்கப்பட்டன.
தனக்கென்றொரு புனைவின்மையின் ‘காதலன் காதல்வகை புனைவாள்' என்றார்.
கணவன் பிரிவிற் கண்ணகி வாடிய மேனி வருத்தத்தோடு 1 இருந்தமை ஈண்டு நினைவு கூறப்படும்.
உணர்தல். தெளிதல்: ஊடல் சிறிது நீட்டிப்பினும் இன்பங் கெடுமாகலின் அளவறிந்துணர்தல் தோன்ற, ‘இனிதினுணரும்' என்றார்;
கணவன் மாட்டு உட்கின்றி இஃதியலாமையின் ‘உட்கி ஊடி உணரும்' எனப்பட்டது.
இதனாற் கற்புடை மகளிரின் நலங்கள் தொகுத்து உரைக்கப்பட்டன.