143 தலைவி தலையசைப்பால் தலைவற்குப் பெருமிதம் - கணவன் மனைவியர் இயல்பு 35
தரவு கொச்சகக் கலிப்பா
உரனொடுமா மதுகையினை உலகமெலாந் துதித்தாலும்
பெருமிதங்கொள் ளேமறியாப் பேதையெனு நந்துணைவி
ஒருசிரக்கம் பிதஞ்செய்யின் உடலெல்லாம் பரவசமாம்
பருவமதிற் சிறியாளிவ் வசியமெவண் படித்தனளால். 35
- கணவன் மனைவியர் இயல்பு, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”நம்முடைய அறிவின் திண்மையையும், உடலின் பெரும் வலிமையையும் உலகோர் எல்லாம் போற்றிப் புகழ்ந்தாலும் யாம் மனமகிழ்வு மிகக் கொள்ள மாட்டோம்.
அறியாச் சிறு பருவத்தினளாகிய நம் துணைவி நம்மை வியந்து ஒருமுறை தலையசைத்தால் நம் உடம்பெல்லாம் மகிழ்ச்சியில் பரவசமாகிறது. பருவத்தில் சிறியவளாகிய இவள் என்னைத் தன் வயப்படுத்தும் கலையை எங்கு படித்தாள்!” என்று தோழனிடம் வியந்து கூறுவதாக இப்பாடலாசிரியர் தெரிவிக்கிறார்.
உரன் - அறிவின் திண்மை.
மதுகை - உடலின் வன்மை.
பெருமிதம் – மிகுந்த மனமகிழ்வு.
சிரக்கம்பிதம் - தலையசைத்தல், வசியம் - வயப்படுத்தல்
பெருமிதம் - elate.