144 நீங்கள் என்றென்றும் என்னருகில் உறைய வேண்டும் - கணவன் மனைவியர் இயல்பு 36
தரவு கொச்சகக் கலிப்பா
என்னுருவைப் படத்தெழுதி யிதுநானே பேதமிலை
நன்னுதலே யிதைக்கோடி நல்கெனக்கு விடையென்ன
அன்னதுநீ ரேயாயிற் பொருளீட்ட வதுசெல்க
மன்னியிவ ணுறைமினென்றாள் மறுசெயல்யா தறியேமால். 36
- கணவன் மனைவியர் இயல்பு, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”என்னுடைய உருவத்தைப் படமாக எழுதி, இது நான்தான், எனக்கும் இப்படத்துக்கும் வேறுபாடு ஏதுமில்லை, நல்ல நெற்றியையுடைய காதலியே! இதைப்பெற்றுக்கொண்டு, எனக்கு விடை கொடு என்று சொன்னேன்.
அதற்கு அவள், அப்படம் நீரேயானால் பொருளீட்டுதற்கு அப்படமே செல்லட்டும். நீங்கள் இங்கேயே நிலைத்து என்னருகில் தங்கியிருக்க வேண்டும் என்று சொன்னாள். வேறு என்ன செய்வது என்று நான் அறியாமல் இருக்கிறேன்” என்று தலைவன் தோழனிடம் கூறுவதாக இப்பாடலாசியர் தலைவனின் மனப்போக்கைத் தெரிவிக்கிறார்.
பேதம் - வேறுபாடு. நன்னுதல் - நல்ல நெற்றியையுடைய காதலி. மன்னி - நிலைத்து.
என் கருத்து:
அந்தக் காலத்திலும், இந்தக் காலத்திலும் பெண்கள் மிகவும் possessive.
தங்கள் கணவர் பிற பெண்களை நாடிப் பிரிந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார்.
அந்தக் காலத்தில் பரத்தையரை நாடிச் செல்வது சாதாரணமாக இருந்திருக்கிறது.
ஆனால் பொருளீட்ட வெளியூர்களுக்குச் செல்ல வேண்டியுமிருந்திருக்கிறது.